சென்னை: எழும்பூர் ரயில்நிலைய மேம்பாட்டு பணி காரணமாக சென்னை எழும்பூர் செல்லும் சில விரைவு ரெயில் பாதை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
அதாவது, ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் மற்றும் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக ரயில்கள் மாற்றுப்பாதைகளில் பயண நேரத்தில் சிறிய தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என தெற்கு ரெயில்வே பயணிகளுக்கு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சில விரைவு மற்றும் சிறப்பு ரெயில்களின் சேவையில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
குருவாயூரில் இருந்து 4, 5, 6, 7, 8, 11, 12, 13, 14, 15, 18, 19, 20, 21, 22, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் காலை 11.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் ரெயில் (வண்டி எண் 16128), மாற்று பாதையாக மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இதனால் சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லாது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை நிலையங்களில் கூடுதல் நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் இருந்து 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு ஐதராபாத் செல்லும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07229) மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்று பாதை வழியாக இயக்கப்படும். இதனால் கொடைக்கானல் சாலை மற்றும் திண்டுக்கல் நிலையங்கள் வழக்கம்போல் சேவையில் இடம்பெறாது. அதற்கு பதிலாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் பராமரிப்பு பணிகள் மற்றும் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. மாற்று பாதை மூலம் இயக்கப்படுவதால் பயண நேரத்தில் சிறிய தாமதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், பயணிகள் தங்களது பயண அட்டவணையை முன்கூட்டியே சரிபார்த்து திட்டமிட்டு பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், முன்பதிவு செய்துள்ள பயணிகள் தங்களது டிக்கெட் விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது ரெயில்வே விசாரணை மையங்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாற்று ஏற்பாடுகள் தொடர்பாக ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் அருகிலுள்ள ரெயில்வே நிலையங்களை தொடர்புகொள்ளலாம் என்றும் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.