சென்னை
நேற்று கொரொனா பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கால் தமிழகம் முடங்கியது.
இந்தியா முழுவதும் ஒமிக்ரான் பரவலால் மீண்டும் கொரோனா அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது மூன்றாம் அலை கொரோனா பரவல் என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. தினசரி பாதிப்புக்கள் 10 ஆயிரத்தைக் கடப்பதால் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இதில் ஒன்றாக இரவு நேர ஊரடங்கு கடந்த ஜனவரி 6 முதல் அமலாக்கப்பட்டது. மேலும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமலாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலானது. நேற்று முன் தினம் இரவு 10 மணி முதலே கட்டுப்பாடுகள் அமலானதால் காவல்துறையினர் அனைத்து பகுதிகளையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து தீவிர கண்காணிப்பைத் தொடங்கினர்.
அத்தியாவசிய தேவைகளான மருத்துவ பணிகள், மருந்தகங்கள், பால் விநியோகம், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனப் போக்குவரத்து, பெட்ரோல் பங்க் போன்றவை 24 மணி நேரமும் இயக்கின மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ஏற்கனவே பதிவு செய்தோர் விமானம், ரயில் நிலையங்களுக்கு செல்ல சொந்த மற்றும் வாடகை வாகனங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
வாடகை வாகனங்கள் குறைவாக இயங்கியதால் கட்டணம் அதிகமானது. உணவகங்கள் இயங்க அனுமதிக்கப்பட்டு, வீடுகளுக்கு உணவு வழங்கும் பணி அனுமதிக்கப்பட்டும் தெருவோரம் வசிக்கும் ஆதரவற்றோர் உணவின்றி வாடும் நிலை உண்டானது. இதற்கு முந்தைய ஊரடங்கின் போது பலரும் உதவி செய்தநிலையில் நேற்று அவ்வாறு உதவி கிடைக்காததால் அவர்கள் சிரமம் அடைந்தனர்.
திருமண நிகழ்வுகளுக்கு அழைப்பிதழைக் காட்டினால் பயணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அதேவேளையில் 100 பேருக்கு மேல் வந்த திருமண மண்டபங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கிலும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறந்திருந்த போதிலும் நேற்று முன் தினம் பலரும் மதுபானங்களை வாங்கி வைத்திருந்தனர். நகரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது.
சென்னை நகரின் அனைத்து முக்கிய இடங்கள் மற்றும் சாலைகள் ஆள் நடமாட்டமின்றி இருந்தன. தேவையின்றி சுற்றுத் திரிந்தோர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதியப்பட்டன. இன்று அதிகாலை 5 மணியுடன் இந்த 31 மணி நேர முழு ஊரடங்கு முடிவடைந்தது. இன்று ஊரடங்கை நீட்டிப்பது மற்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.