டில்லி,
டில்லியில் நடைபெற்ற கல்வி வாரிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக கல்வி அமைச்சர், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இருமொழி கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு என்றும் வலியுறுத்தப்பட்டது.
‘நாட்டின் சமூக கட்டமைப்புக்கு முரண்பாடாக அமையும் என்பதால், வெளிநாட்டு பல்கலைக் கழங்களை, இந்தியாவில் அமைக்கஅனுமதிக்க கூடாது’ என, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நேற்று   மத்திய அரசின் கல்வி வாரிய ஆலோசனைக் கூட்டம் தலைநகர் டில்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிப்பது போன்ற ஷரத்துக்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.
மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் 64-ஆவது கூட்டம் தில்லி விஞ்ஞான் பவனில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே. பாண்டிய ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி.சபிதா, உயர் கல்வித் துறை செயலர் ஏ.கார்த்திக், கல்வித் துறை துணைச் செயலர் ஏ.ஆர்.ராகுல்நாத் ஆகியோரும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்று பேசியது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பாண்டியராஜன்,
மாநிலங்களில் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் ஆசிரியர்களை நியமிக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நிதியுதவி அளிக்கவும், தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படும் மடிக் கணினித் திட்டத்துக்கு நிதி ஆதரவு அளிக்கவும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.
உள்நாட்டு மொத்த உற்பத்தியில் (ஜிடிபி) கல்விக்கு 6 சதவீதம் ஒதுக்குவது பற்றி கூட்டத்தில் ஆலோ சிக்கப்பட்டது.
தமிழகத்தில் 16 கல்வித் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அத்திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஆதாரம் அளிக்கவும், குறிப்பிட்ட திட்டம் என்று இல்லாமல் கல்வித் தரத்தை உயர்த்தும் பொதுவான திட்டங்களுக்கு நிதி ஆதரவு அளிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
சம்ஸ்கிருதத்தை தேசிய மொழியாக ஊக்குவிக்கும் கருத்துருவுக்கு தமிழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது..
இரு மொழி கொள்கைதான் தமிழகத்தின் நிலைப்பாடு என்று எடுத்துரைக்கப்பட்டது.
இதற்கு வடகிழக்கு மாநிலங்கள் ஆதரவு தெரிவித்தன. மொழிக் கொள்கை விவகாரத்தில், தமிழக அரசு சமரசம் செய்து கொள்ளாது என்ற நிலைப்பாட்டை மத்திய அமைச்சர் ஜாவ்டேகர் புரிந்துகொண்டதாகக் கருதுகிறேன்.
இதேபோல, தமிழகத்தில் செயல்படும் கஸ்தூரிபாய் பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, கூடுதலாக நிதி ஒதுக்கவும், தற்போதுள்ள 34 கே.வி. பள்ளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது என்றார் பாண்டியராஜன்.

கே.பி.அன்பழகன்
கே.பி.அன்பழகன்

உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறுகையில்,
“வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களின் கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் அமைக்கப்படுவதை தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒருபோதும் ஏற்றதில்லை. தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மூலம் வளர்ச்சிக்கான வாய்ப்பு சிறப்பாக உள்ளது.
எனவே, வெளிநாட்டு பல்கலைக்கழங்களின் நிறுவனங்கள் தமிழகத்தில் அமைக்கப்படுவதை தமிழக அரசு தொடர்ந்து எதிர்க்கும் என்றார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட  உயர் கல்வித் துறை அமைச்சர்  அன்பழகன் பேசியதாவது,
தமிழகத்தில், மீன்வளம், விவசாயம், கல்வி, சட்டம், இசை, கலை, விளையாட்டு என, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பல்கலைக் கழகங்கள் உள்ளன.  எனவே, அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகை யிலான, பல்நோக்கு முனைப்புடன் கூடிய, மத்திய அரசின் அணுகுமுறையை தமிழகம் ஏற்காது.
அனுபவம் வாய்ந்த கல்வியாளர்களுக்கு, உயர் கல்வி நிறுவனங்களில் தற்போது அளிக்கப்பட்டு வரும் வாய்ப்புகள் நீடிக்க வேண்டும்.  இந்த நடை முறையில் மாறுதல்கள் கூடாது. எனவே, ‘இந்திய கல்விச் சேவை’ என்ற மத்திய அரசின் கருத்துரு வாக்கத்தை தமிழகம் எதிர்க்கிறது.
உயர் கல்வி நிறுவனங்களில் காணப்படும் பிரச்னைகளை களைவதற்கு, தமிழகத்தில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையிலான, இரு கமிட்டிகள் ஏற்கனவே உள்ளன,
புதிய வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுக்கு, அனுமதி வழங்குவதை மத்திய அரசு ஊக்குவிக்கக் கூடாது. வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் சமூக கண்ணோட்டத்தை காட்டி லும், வர்த்தக நோக்கமே பெரிதாக இருக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.