சென்னை: கல்வி , மருத்துவத்திற்கு செலவு செய்வது இலவசம் ஆகாது என கொளத்தூர் தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு நடைற்ற கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது தொகுதியான கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் கால்வாய் பணி உள்பட பல்வேறு பணிகளை ஆய்வு செய்ததுடன், புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜமாலியா பகுதியில் சந்திரயோகி தெரு முதல் குக்ஸ் சாலை வரை 880 மீட்டர் நீளத்திற்கு ரூ. 4.27 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கொளத்தூர் திரு.வி.க நகர் மண்டலம், எஸ்.ஆர்.பி. கோயில் சாலையில் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதி ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.3.10 கோடியில் 260 மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, பணிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, கொளத்தூர், எவர்வின் பள்ளி எதிரில் உள்ள பேப்பர் மில்ஸ் சாலையில் கொசஸ்தலையாறு வடிநிலப் பகுதி ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ. 23.40 கோடியில் 468 மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டார்.
பின்னர் கொளத்தூர் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பள்ளி சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளிக் கட்டடத்தை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ. 97.52 இலட்சம் மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் , மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
கொளத்தூர் தோன்போஸ்கோ பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கி வாழ்த்தினார்.
இதையடுத்து, சென்னை கொளத்தூர் கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு உரையாற்றினார்.
விழாவில் பேசிய முதல்வர், ” தமிழ்நாடு முழுவதும் சுற்றிச்சுழன்று வந்தாலும் கூட எனது தொகுதிக்கு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி எனது தொகுதியில் அமைந்த்தில் பெருமகிழ்ச்சி. முதலமைச்சரிடம் எல்லோரும் கோரிக்கை வைப்பார்கள். ஆனால் நான் கோரிக்கை வைக்காமலேயே 10 கல்லூரியில் ஒரு கல்லூரியை எனது தொகுதிக்கு அமைச்சர் சேகர்பாபு வழங்கி செயல்படுத்தி வருகிறார். இந்தக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் கிடையாது. அதே போன்று இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் கட்டணம் கிடையாது, கல்வி மற்றும் மருத்துவத்திற்கு செலவு செய்வது இலவசம் ஆகாது. இலவசம் வேறு நலதிட்டங்கள் வேறு என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். பெண் பிள்ளைகள் படித்துவிட்டு சரியான பணிகளைத் தேர்வு செய்ய வேண்டும். கொளத்தூர் தொகுதிக்கு நான் செல்லப்பிள்ளை. தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு 13 முறை தொகுதிக்கு வந்து உள்ளேன்” என்றார்.