ந்திய அரசியல் வரலாற்றில், ஒருத்தரை பார்த்து.. ‘’தெய்வமே நீ யாருய்யா.. இவ்ளோ நாளா எங்கய்யா இருந்தே.. எப்படிய்யா உன்னால மட்டும் இப்படி சாதிக்க முடிஞ்சது என்று கேட்கவேண்டுமென்றால் அது நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமியை நோக்கித்தான் இருக்கவேண்டும்.

பட்டப்பெயர்களால் அறியப்படுகிற மாபெரும் தலைவர்கள்கூட இவர் இடத்தில் இருந்திருந்தால் இப்படி சாதித்திருப்பார்களே என்பதுசந்தேகமே.. கடந்திருப்பது ஓர் ஆண்டு ஆட்சிதான்.. ஆனால் எதிர்கொண்ட சூழல்கள்தான் உண்மையிலேயே மலைக்கவைக்கிறது.

ஒவ்வொரு நாளுமே ஓராயிரம் பிரச்சினைகள்.. இது பலவீனம்..ஆனால் இதைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருக்க செய்துவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் பலமே.

முதலில் இந்த ஆட்சியே ஜெயலலிதாவை தவிர வேறு யாருமே உரிமை கொண்டாடமுடியாத ஒன்று..முன்னே பின்னே பொதுவெளி அரசியலில் சசிகலாவை ஜெயலலிதா அனுமதித்திருந்தால்கூட கொஞ்சமாவது யோசிக்கலாம்..

முப்பதாண்டு காலம் உடன் இருந்தேன் என்று சொல்கிற சசிகலாவின் குரலையே, ஜெயலலிதா மறைந்தபிறகுதான் முதன்முறையாக பொதுமக்கள் கேட்க முடிந்தது.

ஏற்கனவே இரண்டு முறை ஜெயலலிதாதாவால் முதலமைச்சர் நாற்காலியில் அமரவைக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், மீண்டும் வாய்ப்பு பெற்றார். ஓரளவுக்கு தகுதியானவர் என்று மக்கள் நினைத்தபோதே, ஜல்லிக்கட்டு போன்ற சில விவகாரங்களால் அவருக்கு நல்ல பெயர் கிடைக்க ஆரம்பித்தது. விட்டால் ஆணியடித்தபடி அமர்ந்து முதலுக்கே மோசம் செய்துவிடுவாரோ என்று சசிகலா கர்ஜிக்க, பதிலுக்கு ஓபிஎஸ் தியானத்தோடு தர்ம யுத்தம் ஆரம்பிக்க, இரு தரப்புக்கு இடையே மோதல் வெடித்தது.

இந்த காலகட்டத்தில் தனக்கு வெறும் அமைச்சர் பதவி இருந்தாலே போதும் என்பதுதான் எடப்பாடி பழனிச்சாமி யின் நினைப்பாக இருந்தது. சசிகலாவை மீறுவது என்பதெல்லாம் அவர் நினைத்துப்பார்க்காத ஒன்று.

ஆனால் விதியானது சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவை தண்டனை கைதியாக்கி உள்ளே போட்டது. தனது குடும்பத்தை சேர்ந்த ஒருவரை முதலமைச்சர் ஆக்கினால் கதை இன்னும் நாறிவிடும் என்று உணர்ந்த சசிகலா, முதலமைச்சர் நாற்காலிக்கு எடப்பாடியை கை காட்டினார். ஜெயலலிதாவுக்கு ஒரு ஓபிஎஸ் போல, தனக்கு ஒரு விசுவாசியாக எடப்பாடி திகழ்வார் என கணக்குபோட்டார் சசிகலா.

முதல் போட்ட முதலாளிக்கும் அதிக சம்பளம் வாங்கும் மேனேஜருக்குமான வித்தியாசத்தை உணர்ந்து கொண்டதுதான் இங்கே எடப்பாடியின் அசாத்திய திறமை.. ஓபிஎஸ் கோட்டை விட்ட இடத்தை, முதன் முறையாய் முதலமைச்சர் நாற்காலியில் அமாந்த எடப்பாடி விடத் தயாராகவே இல்லை.

சசிகலா உள்ளே போனதால கிடைத்த நாற்காலியை, எடப்பாடி தனக்கே நிரந்தரமாக்கிக் கொள்ளும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்தார். அமைச்சரவையில் இருந்த தனது குருநாதனான செங்கோட்டையனையே அவர் ஆரத்தழுவவும் இல்லை… அலட்சியப்படுத்தி தொலைவில் வைக்கவும் இல்லை.. என்னை வாழவிட்டால் உன்னையும் வாழவிடுவேன் என்கிற பாலிசி இது.

அடுத்த ஃபிரைடு ரைஸாய் வந்தது ‘துணைப்பொதுச்செயலாளர்’ தினகரன் கைது சமாச்சாரம். தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக டெல்லி போலீசாரை வைத்து தினகரனை மத்திய அரசு பாடாய் படுத்திய சந்தர்ப்பத்தை சரியாக கையிலெடுத்தார் எடப்பாடி.

ஒரு தரப்பில் மத்திய அரசின் சகல பலம் பொருந்திய பின்னணில் மார்தட்டும் தர்மயுத்தம் ஓபிஎஸ்.. இன்னொரு தரப்பில், ஏற்றிவிட்ட ஏணி என்றாலும் என்றைக்காவது இறங்கச்சொல்ல காத்திருக்கும் சசிகலா அண்ட் கோ.. மூன்றாவது தரப்பிலோ, இதுவரை இல்லாத அளவிற்கு 98 எம்எல்ஏக்கள் என்ற பலத்தோடு எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக கூட்டணி.

இங்கேதான் ஸ்டாலின், சசிசலா, தினகரன், ஓபிஎஸ் எல்லாரையும் மிஞ்சி நின்றார் எடப்பாடி. எங்கேயும் தன்னை முன்னிலைப்படுத்தி பேசவேயில்லை அவர்.. எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஜெயக்குமார், வேலுமணி போன்ற மூத்த அமைச்சர்களை பேசவைத்தே ஆழம் பார்த்தார்.

முதல்வேலையாக, அரசர் காலத்து நெம்பர் ஒன் ராஜதந்திர வேலை.. அதுதான், உதவி செய்தவனை ஈவிரக்கம் பார்க்காமல் போட்டுத்தள்ளுவது… இதனை கனக்கச்சிதமாக செய்தார் எடப்பாடி. தினகரன் கைது, ஜெயலலிதா சாவால் சசிகலா மீதான வெறுப்பு போன்ற விஷயங்களை தனக்கு சாதகமாக்கிக்கொண்டார்.

அம்மா ஆட்சி தொடர்வதற்கு சசிகலா குடும்பத்தின் கெட்ட பெயர் பெரிய இடையூறாக இருக்கிறது என்கிற பேச்சு ஒலிக்க ஆரம்பித்தது. ஏற்கனவே சசிகலாவுக்கு எதிராக ஒபிஎஸ் வண்டி ஓட்டிய டிராக்கிற்கு பக்கத்திலேயே அதே கோட்பாட்டில் இவரும் ஒரு டிராக் போட்டு வண்டியை ஓட்டினார்.

அடுத்தடுத்து இரண்டு முக்கிய நிகழ்வுகள்.. ஒன்று, சசிகலா குடும்பத்தாரால் ஆட்சிக்கு கெட்ட பெயர் எற்படுவதால் அவர்கள் குடும்பம் கட்சியை விட்டு விலகியிருக்க வேண்டும் என்று அந்த கம்பெனி அடியோடு கழட்டி விடப்பட்டது.

அடுத்து, பிரதமர் நரேந்திர மோடியால் கொம்பு சீவி விடப்பட்டு மத்திய அரசின் தத்துப்பிள்ளையாகவே மாறி, முதலமைச்சர் கனவோடு சம எதிரியாக காட்டிக்கொண்டி ருந்த ஓபிஎஸ்சை அரவணைத்தது.

ஓபிஎஸ்க்கு மோடியிடம் இருந்த செல்வாக்கை ஒரே ஸ்ட்ரோக்கில் குறைத்து, ஆட்சியில், அதாவது தனக்கு கீழே இருக்கும்படி வைத்து அதையும் முடித்தார் எடப்பாடி,

எஞ்சியது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்., அவரோடு வீணாய் மோதிக்கொண்டிருப்பதைவிட அவரது எம்எல்ஏக்களில் கணிசமான அளவுக்கு  பிரித்தெடுத்து கேட்டதை கொடுத்து சரியாக தீனிபோட்டு வளர்த்தால் போதும் என்பதை புரிந்து கொண்டார்.

இன்றைய தேதிக்கு திமுக தொண்டர்கள் வேண்டுமானால் எடப்பாடி ஆட்சி போகவேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் திமுக எம்எல்ஏக்களில் அத்தனை பேரும் சொல்வார்களா என்பது கேள்விக்குறியே ? பொதுவாக எங்கள் தொகுதிக்குள் அரசு அலுவலங்களில் எங்களுக்கு மதிப்பே கிடையாது என்று எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் புலம்புவார்கள். இதுமாதிரி புலம்பல்கள் எடப்பாடி ஆட்சியில் இதுவரை உலுக்கி எடுத்திருக்கிறதா என்று பார்த்தால் விஷயம் புரியும்.

இதைவிட முக்கியமாக சமாளிக்கவேண்டிய கூட்டம் அதிமுக எல்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள்..

அணிகள் இணைந்தபோது ஓபிஎஸ், மை.பாண்டியராஜன் ஆகிய இருவருக்கு மட்டுமே மீண்டும் அமைச்சரவை யில் இடம்..ஒருவரை கூடுதலாக சேர்த்தால்கூட இருக்கின்றவர்களில் ஒருவரை கழட்டிவிடவேண்டியிருக்கும். அப்படி கழட்டினால் அந்த முன்னாள் அமைச்சர் சும்மா போவாரா? ஆட்சியில் நடக்கும் சில விஷயங்களை வெளியே கொட்டி பரபரப்பாக்குவார்.

இன்னொருபுறம் காலியான அமைச்சர் இடத்தை பிடிக்க அத்தனை எம்எல்ஏக்களும் தாளமுடியாத நெருக்கடியை கொடுப்பார்கள்.. அப்புறம்..மொத்தமாய் ஆட்டமே குளோஸ்.

‘’என்னை அசைந்தால் நீங்களும் விழுந்துவிடுவீர்கள்.. இந்த ஆட்சி போய் தேர்தல் வந்தால் நான் உட்பட எத்தனை பேர் மீண்டும் சட்டசபைக்கு வருவோம் என்றே தெரியாது..அப்புறம் உங்கள் இஷ்டம். கிடைப்பது தொடர்ந்து வேண்டுமா? இல்லை முதலுக்கே மோசமாக போகணுமா?’’ இந்த வார்த்தைகளில்தான் எடப்பாடி கட்டிப்போட்டி ருக்கிறார் மாண்புமிகுக்களை. இதனால்தான் எடப்பாடிக்கு தொந்தரவே இல்லாமல் ஆட்சி ஓடிக்கொண்டி ருக்கிறது.

நீட் தேர்வு குழப்பம், டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானோர் பலி, ஓகி புயலில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் காணாமல் போய்விட்டது, சினிமாவுக்கு கேளிக்கைவரி, உள்ளாட்சி தேர்தல் நடத்த நெருக்கடி, பல திட்டங்க ளுக்கு அதிக மதிப்பீடு கொடுத்து ‘கறப்பது’. பேருந்து கட்டணங்களை தாறுமாறாக உயர்த்தியது எத்தனை யெத்தனை பிரச்சினைகள்.

அமைச்சர்கள் வேறு, வாயை திறந்தாலே, அது உளறலாகவும் காமெடியாகவும் போய்விடும் கொடுமையோ கொடுமை.. இதுபோதாதென்று ரஜினி, கமல் போன்ற நட்சத்திரங்கள்வேறு அரசியல் பிரவேசம் என மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் இவ்வளவு அமளி துமளிக்கும் மத்தியில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மாவட்டந்தோறும் எம்ஜிஆர் நூற்றாண்டுவிழா கொண்டாடுகிறேன் என்ற போர்வையிலேயே நாலைந்து மாதங்களை எடப்பாடி ஓட்டிய விதம், அது அவருக்கே உண்டான நேர்த்தி. பதிலுக்கு பதில் பேசினால் வீண் சிக்கல்தான் என்பதை உணர்ந்து முதலமைச்சர் பெரும்பாலும் சைலன்ட் மோடிலேயே  இருக்கக்கற்றுக்கொண்டார்.

நாட்டு மக்களுக்காக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு திட்டங்களை தீட்டவேண்டிய ஆட்சியாளர் என்பதைவிட, வேலையை தக்கவைத்துக் கொள்வதற்காக அன்றைய வேலையை அன்றைய தினமே முடித்துவிட்டு கிளம்புகிற குமாஸ்தா மனநிலையே எடப்பாடியிடம் மேலோங்கியுள்ளது.

அமைச்சர்களின் அலுவலகங்களில் கோப்புகள் நகர்கின்றன. முதலமைச்சரை சுலபமாக சந்திக்கமுடிகிறது என்கின்றனர் தொழில் வர்த்தக ஜாம்பவான்கள்.. எல்லா மட்டத்திலும் ஊழல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஆனால் எவ்வளோ போராடியும், மைனாரிட்டி எடப்பாடி ஆட்சிக்கு ஒரு இன்ச் நெருக்கடியைக்கூட தரமுடியவில்லை.

சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தாலும் தேறுமா என்ற சந்தேகம் திமுகவுக்கு இன்னமும் அகன்றபாடில்லை. அதிமுகவுக்குள் சிதறல்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சிதறலையும் திமுகவால் தன் வசப்படுத்த முடியவில்லை.

வளைத்துபிடித்து கட்டுக்குள் வைத்திருந்த மத்திய ஆட்சியாளர்களைக்கூட, முடிந்தால் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்கிற மாதிரிதான் எடப்பாடி அரசு முன்பை விட துணிச்சலாக சைகைகளை காட்டுகிறது.

இதை தாங்கமுடியாமல்தான் மத்திய இணை அமைச்சர் பொன்,ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் பயங்கரவாத பயிற்சிக்கூடங்கள் செயல்பட்டுவருகின்றன என்று சட்டம் ஒழுங்கு விஷயத்தை முதன் முறையாக கையில் எடுத்திருக்கிறார்.

இந்த ஓராண்டில் எடப்பாடி தரப்பு பலமாக அடிவாங்கிய ஒரே இடம் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தினகரனிடம் தோற்றதுதான்… சாதாரண 20 ரூபாய் நோட்டு, பயங்கர ஆயுதமாய் திடீரென மாறும் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை.

தினகரன் ஆதரவு எம்ஏல்எக்கள் 18 பேர் பதவி பறிக்கப்பட்ட விவகாரம், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு எதிராக திமுக தொடுத்துள்ள வழக்கு..இந்த பிரச்சினைகளில் தீர்ப்பு வரும்போது  மறுபடியும் ஆட்சிக்கு சிக்கல் அபாயம் உள்ளது..

இருந்தாலும், ‘கண்டுக்காமல் விட்டால் காணாமல் போய்விடும்’ என்ற மந்திரத்தை கடைப்பிடிக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் ஓராண்டு சாமார்த்தியத்தை பார்த்தால் அதையும் கடக்காமல் போனால்தான் ஆச்சர்யம் என்றே தெரிகிறது..

காரணம், இதுதான். ஜெயலலிதாவை கட்டுக்குள் வைத்திருந்த சசிகலா.. சசிகலாவுக்கே டெரர் முகத்தை காட்டிய ஓ.பிஎஸ்.. ஓபிஎஸ்சை ஒழிக்க புறப்பட்ட தினகரன்.. ஆட்சி நிலைக்காது என்று ஒரு நாளைக்கு மூன்று வேளை தவறாமல் பேட்டி கொடுக்கும் ஸ்டாலின்..ஆனால் இந்த  நால்வரையுமே சேர்த்து மூட்டைகட்டி தோளில் போட்டுக்கொண்டவர்தான் எடப்பாடி பழனிச்சாமி..

மக்கள் செல்வாக்கு என்பது மருந்துக்கும் இல்லாத நிலையிலும்தப்பி பிழைப்பது எப்படி என்ற வித்தையின் வியப்புக்குரிய லேட்டஸ்ட் அரசியல் சேம்பிளே தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர்..