சென்னை: அதிமுகவில் சசிகலாவுக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், இன்றுமுதல் தென்மாவட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். அங்கு அதிமுக நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதனால் எடப்பாடி தரப்புக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவை கைப்பற்ற சசிகலா முயன்றதால் அதிமுக இரண்டாக உடைந்தது அனைவரும் அறிந்ததே. இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதும், உடைந்த அதிமுக மீண்டும் ஒட்டியது. இபிஎஸ், ஓபிஎஸ் என்ற இரட்டை தலைமை கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வந்தது.
ஆனால், இருவருக்கும் இடையே இணைக்கமான சூழல் எழாததாலும், ஜாதிய ரீதியிலான ஆதரவாளர்களாலும், ஆட்சியும், கட்சியும் அலங்கோலமானது. இதனால், அதிமுக ஆட்சியில் இறுதிகாலத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடுமையான தோல்வியை சந்தித்தது. அதுபோல, பாராளுமன்ற தேர்தல் மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு தலைமையின் ஒற்றுமையின்மையே காரணம் என்று விமர்சிக்கப்பட்டது. பல அதிமுக தலைவர்கள் அங்கிருந்து விலகி, திமுக, பாஜக என மாற்று கட்சிக்கு தாவினர்.
இதற்கிடையில் 4ஆண்டு சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா, மீண்டும் தீவிர அரசியலில் இறங்க திட்டமிட்டு வருகிறார். ஏற்கனவே அவருக்கு, அவரது சொந்த ஜாதியினர் ஆதரவு உள்ள நிலையில், அதிருப்தியாளர்களையும் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இதனால், அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ள நிலையில், பல தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் இரட்டை தலைமைக்கு எதிராக பகீரங்கமாக குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சசிகலாவை எதிர்த்து கட்சியை உடைத்த முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமே கட்சியில் சசிகலாவை இணைப்பது குறித்து கட்சி தலைமை பரிசீலிக்கும் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த பரபரப்பான சூழலில் ஓபிஎஸ்-ன் தொகுதியில், அவரது முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட செயல்வீர்கள் கூட்டத்தில், சசிகலா மற்றும் டிடிவியை அதிமுகவில் சேர்த்து, சசிகலா தலைமையை ஏற்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல் ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது தான் கட்சித் தொண்டர்களின் விருப்பம் என்று கூறி வருகிறார்.
இந்த விவகாரத்தில் பழனிச்சாமியும், ஓ.பன்னீர்செல்வமும் புதிய தீர்மானத்தின் மீது எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இது அதிமுகவில் மேலும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து எடப்பாடி தனது ஆதரவாளர்களான வேலுமணி, தங்கமணி உள்பட பலருடன் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஓபிஎஸ்-சும் அவரது ஆதரவாளர்களுடன் தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த சூழலில், அதிமுக நிர்வாகிகளை சந்திக்கும் திட்டத்தை ஒத்திவைத்திருந்த சசிகலா மீண்டும் தனது திட்டத்தை செயலாக்கம் செய்யும் வகையில், தென்மாவட்ட சுற்றுப்பயணத்தை இன்று தொடங்கி உள்ளார். 2 நாட்கள் பயணமாக அவர் இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.
நெல்லை ,தென்காசி, திருச்செந்தூர் பகுதிகளில் தனது ஆதரவு அளிக்கும் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 நாட்கள் சுற்றுப்பயணம் முடிந்து சென்னை திரும்பும் சசிகலா, அதிமுக நிர்வாகிகளை சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எடப்பாடி தரப்பினர் பதற்றம் அடைந்து உள்ளனர். ஓபிஎஸ்-ன் சொந்த மாவட்டத்தில் பகீரங்கமாக சசிகலாவுக்கு ஆதரவு எழுந்துள்ளதால், இதன் பின்னணியில் ஓபிஎஸ் இருக்கிறார் என்பதை உணர்ந்த எடப்பாடி ஆதரவாளர்கள், கட்சியை கைப்பற்ற என்ன செய்யலாம் என்று ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
அதிமுக மீண்டும் உடையுமா? அல்லது ஓபிஎஸ், இபிஎஸ் மீண்டும் சசிகலா காலில் விழுவார்களா? என்பது வரப்போகும் நாட்களில் தெரிய வரும். விரைவில் அதிமுக வில் அதிரடி காட்சிகள் அரங்கேறும் என தமிழக மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்க.ள