சென்னை: தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2026 தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ள நிலையில், எடப்பாடியின் திடீரென டெல்லி பயணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. மீண்டும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக பேசப்படும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளார். –

தமிழக சட்டமன்ற பட்ஜெட்  கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் முடிவடைந்த நிலையில், தற்போது  மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், துறை சார்ந்த புதிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

.இந்த நிலையில், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி திடீர் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.  இது தமிழக அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைநகர் டெல்லியில் அதிமுக கட்சி சார்பில் புதிய அலுவலகம் கட்டப்பட்டு வரும் நிலையில், அந்த அலுவலகத்தை பார்வையிட்டு, அதன் திறப்பு விழா குறித்து முடிவு செய்ய டெல்லி சென்றுள்ளதாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவித்து வரும் நிலையில், டெல்லியில், எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு தலைவர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி அப்படியே தொடரும் நிலையில்,  அதிமுக கூட்டணியில் சலசலப்பு எழுந்துள்ளது. அந்த கூட்டணியில் இருந்து  தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுக்க முடியாது என கூறிய நிலையில், பிரேமலதா விஜயகாந்த் திமுக பக்கம் சாய்ந்து வருகிறார். இதனால் அதிமுக கூட்டணி மேலும் பலவீனமடையும் வாய்ப்பு உள்ளது.

அதனால்,  மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி உருவாக வேண்டும் பல மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.  இந்தநிலையில், டெல்லி பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமியின் பயணம் பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில்  பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.