சென்னை: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில், பிரதமர் மோடியை சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி மோதலில், எடப்பாடி பழனிச்சாமி கை ஓங்கி உள்ளது. கடந்த ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. இதன் மூலம் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு சட்ட ரீதியிலான அங்கீகாரம் கிடைத்துள்ளது.
எடப்பாடியை முடக்க, ஓபிஎஸ் ஆளும்கட்சியான திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக எடப்பாடி ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்களின் வீடுகடிளில் அடிக்கடி ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன. இரு தரப்பினரிடையே தொடர்ந்து மோதல்கள் நீடித்து வரும் நிலையில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜகவின் ஆதரவு யாருக்கு என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் ஒலிம்பியாட் போட்டியின்போது பிரதமர் மோடி சென்னை வந்தபோது, இருவரும் அவரை சந்திக்க முயற்சி மேற்கொண்டதாக கூறப்பட்டது. ஆனால், விமான நிலையத்தில் சந்தித்ததோடு சரி. வேறு தனியாக எந்தவொரு சந்திப்பும் நடக்கவில்லை.
இந்த நிலையில், இன்று இரவு திடீரென அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். எடப்பாடி, நாளை சேலம் செல்ல திட்டமிட்டிருந்த எடப்பாடி பழனிசாமி அந்த பயணத்தை ரத்து செய்துவிட்டு, இரவு 9மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி செல்ல உள்ளார். நாளை அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.