சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து, அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்து வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறார்.
தமிழகத்தை கடந்த ஜூன் 18, 19 ஆம் தேதிகளில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் காலனி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததாக 200க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 63க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ள நிலையில், 100க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தாலும், எதிர்க்கட்சிகள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு நிகழ்வு மற்றும் அதுகுறித்து சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதுடன், சட்டபேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்தும், சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தியும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் இன்று உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் தவிர்த்து, அதிமுக தொண்டர்கள் உள்பட வேறு யாரும் கலந்துகொள்ளக்கூடாது உள்பட பல்வேறு கண்டிஷன்களை இதுவரை இல்லாத வகையில் காவல்துறை கெடுபிடி செய்துள்ளது. இந்த நிகழ்வுக்கு 23 நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். அமைதியான முறையில் உண்ணாவிரதம், பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமை, அரசு அதிகாரிகள், தனிப்பட்ட நபர்களை தாக்கி பேசுதல், முழக்கமிடுதல் கூடாது என பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், இன்று காலை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 9 மணிக்கு தொடங்கியுள்ள இந்த உண்ணாவிரதம் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. நடந்து வரும் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும், திமுக அரசு இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் உள்ளிட்ட பதாகைகளுடன் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.