சென்னை: 5 மாத கால திமுக ஆட்சியில் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் மட்டுமே உள்ளது என்று குற்றம் சாட்டிய முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று கூறினார்.
ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து புகார் அளிப்பதற்கான கிண்டியில், உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரவியை , எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து மனு அளித்தார். அவருடன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
ஆளுநரை சந்தித்த பின் செய்தியளார்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ஊரக உள்ளாட்சி தேர்தல் முறைகேடு குறித்து ஆளுநரிடம் மனு அளித்துள்ளதாகவும், திமுக தில்லுமுல்லு செய்து ஜனநாயக படுகொலை செய்து இருப்பது குறித்தும், வெற்றி பெற்றவர்களை தோல்வி அடைந்ததாக அறிவித்துள்ளதாகவும் ஆளுநரிடமம் தெரிவித்து உள்ளதாகவும் கூறினார்.
மேலும், உள்ளாட்சி தேர்தல் பணிகளில் மாவட்ட ஆட்சியர்கள் முறையாக பணி மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியதுடன், தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைப்பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றத்தை அதிமுக நாடியதாகவும், நீதிமன்றமும், நாட்டிற்கு முன்னுதாரணமாக இருக்கும் தேர்தலாக நடைப்பெற வேண்டும் உத்தரவிட்ட போதிலும், ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற யுக்திகளை கையாண்டு வெற்றி பெற செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.
திருப்பத்தூரில் வாக்குப்பெட்டியை எடுத்து சென்ற சட்டமன்ற உறுப்பினர் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியவர், கடந்த 2019ல் உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக இருந்ததாகவும், வார்டு மறுவரை பணிகள் குறித்து நீதிமன்றத்திற்கு சென்றது திமுக தான் என்றார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி வருவது குறித்து ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும், தூத்துக்குடியில் அமைச்சரின் உதவியாளர், காவலரை கன்னத்தில் அறைந்த சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது என்றவர், மக்களை பாதுக்காக்கும் காவலருக்கே இந்த நிலை என்றால் பொதுமக்களுக்கு என்ன நிலை என்பதை பார்ப்பதோடு, தவறு செய்தவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வேண்டும் என்றே திட்டமிட்டு பழிவாங்கும் நோக்கத்தோடு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்து வருவதாகவும்,மடியில் கனம் இல்லை விழியில் பயம் இல்லை என்றவர்,
திமுக அரசின் கடந்த 5 மாத கால ஆட்சியில் கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் மட்டுமே நடைபெற்று வருகிறது என்று குற்றம்சாட்டிய எடப்பாடி பழனிச்சாமி, ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணம் கொடுத்து மட்டுமே திமுக வெற்றி பெற்றுள்ளது என்றார்.
சசிகலா குறித்த செய்தியளரின் கேள்விக்கு பதில் அளித்தவர், அதிமுகவிற்கும் சசிகலாவிற்கு எந்த தொடர்பும் இல்லை என்று கூறியதுடன், சசிகலா பொதுச்செயலாளர் என கூறி வருவதை தடுக்க சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் இருந்த போது மீனவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்ததாகவும், தற்போது அது கேள்விக்குறியதாக மாறி வருவதாக கூறியவர், மீனவர்களுக்கு அதிமுக என்றும் உறுதுணையாக இருக்கும் என்றார்.