மும்பை:

நில முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்தியஅமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரபுல் பட்டேலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது விமான போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரபுல் பட்டேல். இவர்மீது ஏற்கனவே ஏர்இந்தியாவுக்கு வெளிநாட்டு உபகரணங்கள் வாங்கியதில்  பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும், இதில் முறைகேடு நடைபெற்றதாகவும் கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

அதுபோல, பிரபல மும்பை தாதா, தாவூத் இப்ராகிம் கூட்டாளியான இக்பால் மிர்சியுடன் இணைந்து நில முறைகேடு செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கில், பிரபுல் படேல் அக்டோபர் 18ந்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அதே நேரத்தில் இந்த விவகாரம் குறித்து பிரபுல் படேல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் மீது கோஆபரேட்டிவ் வங்கி முறைகேடு தொடர்பாக வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், தற்போது பிரபுல்பட்டேலையும் விசாரணை என்ற பெயரில் அலைக்களிக்க மத்தியஅரசு, தனது அடிமைகளான  சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற  பரிவாரங்களை முடுக்கி விட்டுள்ளது.