சென்னை: ‘லாட்டரி அதிபர்’ மார்ட்டின் நிறுவன அலுவலகத்தில் நடைபெற்ற இரு நாள் ரெய்டில், 8.8 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் நன்கொடையாக அளித்தது தொடர்பான விவகாரம், உச்சநீதிமற் உத்தரவுபடி, கடந்த பிப்ரவரி மாதம் வெளியான நிலையில், மார்ட்டினின் நிறுவனம் ரூ. 1,368 கோடி ரூபாய் அளவுக்கு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்து இருந்தது தெரியவந்தது. அதிகபட்சமாக பாஜகவுக்கும், திமுக வும் அதிக அளவில் நிதி அளித்ததும் தெரியவந்தது. இது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்லாட்டரி நிறுவன அதிபர் மார்ட்டின், அவரது மருமகன் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் தொடர்புடைய இடங்களில் 2 நாட்களாக அமலாக்கத்துறையினர் ரெய்டு நடத்தினர்.

ஏற்கனவே போலியாக லாட்டரி சீட்டு அடித்து மக்களை ஏமாற்றி கோடிக்கணக்கான ரூபாய் சேர்த்து, அதன்மூலம் பல்வேறு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களை நடத்தி இந்தியாவின் முக்கிய பணக்காரர்களில் ஒருவராக வலம் வத்தவர் கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின். இவர்மீது ஏராளமான வழக்குகள் உள்ளன.

இவருக்கு சொந்தமான இடங்களில் து கடந்த 2019 ஆம் ஆண்டு வருமான வரித்துறை யினர் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதில், லாட்டரி விற்பனை மூலமாக முறைகேடாக ரூ.910 கோடி வருவாய் ஈட்டியதையும், அதை 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் மார்ட்டின் முதலீடு செய்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

அதைத் தொடர்ந்து லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில், அமலாக்கத் துறையினர் தொடர்ச்சியாக கடந்த 2019, 2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளில் அடிக்கடி சோதனை நடத்தினர்.

பின்னர், கடந்த ஆண்டு மே மற்றும் அக்டோபர் மாதங்களில் கோவையில் உள்ள மார்ட் டின் மற்றும் அவரின் மருமகன் ஆதவ் அர்ஜுனா, உறவினர்கள் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் தொடர்ச்சியாக, பல கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையாத சொத்துகள் முடக்கப்பட்டன.

இந்த நிலையில், லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் (நவம்பர் 14 மற்றும் 15 ) அமலாக்கத் துறையினர் மீண்டும் சோதனை நடத்தினர்.

அதேவேளையில் அவரது மருமகனான விசிக நிர்வாகி ஆதவ்அர்ஜூனாவுக்கு சொந்த வீடுகள், நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர்.

கோவை மேட்டுப்பாளையம் சாலை, துடியலூரை அடுத்த வெள்ளகிணறு பிரிவு பகுதி யில் உள்ள மார்ட்டின் வீடு, அருகேயுள்ள அவரது தொழில் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகம், ஹோமியோபதி கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடத்தினர். மேலும், கோவை சாய்பாபா காலனி மற்றும் சரவணம்பட்டி அருகேயுள்ள சிவானந்தாபுரம் ஆகிய இடங்களில் உள்ள லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியான லீமாரோஸ் மார்ட்டினின் உறவினர் இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனை இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. நேற்று அதிகாலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.

இந்த சோதனைகளில் மார்ட்டின் அலுவலகத்தில் ரூ.8.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.