சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களிலும் அவர்கள் பங்குதாரர்களாக உள்ள டிவிஎச் கட்டுமான நிறுவனங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவையிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக இருந்து வருபவர் கேஎன். நேரு. அவரது மகன் அருண் நேரு. இவர் பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பி.யாக இருக்கிறார். பல்வேறு தொழில்களும் நடத்தி வருகிறார். சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனமான TVH கட்டுமான நிறுவனங்களிலும் பங்குதாரராக இருப்பதாக கூறப்படுகிறது. அதுபோல கே.என்.நேருவின் தம்பி. கே.என். ரவிச்சந்திரன் தொழிலதிபராக இருந்து வருகிறார். பல்வேறு பல்வேறு தொழில்களையும் நடத்தி வருகிறார்.
இவர்கள் நடத்திவரும் நிறுவனங்களில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்று வருவதாக எழுந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. கே.என்.நேருவின் மகன் வீட்டிலும் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக, அடையாறு, தேனாம்பேட்டை, சிஐடி காலனி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட இடங்களிலும், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்கள் மற்றும், TVH கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இது திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கடந்த இரு மாதங்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை நடைபெற்ற நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் டாஸ்மாக் மது சப்ளை நிறுவனங்களிலும் சோதனை நடத்தியது. இந்த நிலையில், தற்போது அமைச்சர் நேருவின் உறவினர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கோவை மசக்காளிபாளையத்தில் உள்ள TVH கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவை TVH நிறுவனத்தை மணிவண்ணன் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.