சென்னை: தமிழ்நாடு, கேரள உள்பட 10 மாநிலங்களில் உள்ள எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை  நடைபெற்று வருகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி விமான நிலையத்தில் வைத்து, DPI தேசிய தலைவர் MK ஃபைசி. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்து றையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, இன்று சென்னை, மலப்புரம் உள்பட  நாடு முழுவதும் 10 மாநிலங்களில் உள்ள பல்வேறு எஸ்டிபிஐ அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

 கடந்த 2006 நவ.22-ல் உருவான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் பிரிவாக துவக்கப்பட்டதுதான் எஸ்டிபிஐ. இதன் தேசியத் தலைவரான ஃபைஸி மீது பணமோசடி புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அன்று, கேரளாவில் உள்ள ஃபைஸியின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். பின்னர் அவரை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்த முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து திங்கள்கிழமை இரவு டெல்லி விமான நிலையத்தில் ஃபைஸி கைது செய்யப்பட்டார். இந்த கைது நடவடிக்கையை எஸ்டிபிஐ உள்ளிட்ட பல்வேறு முஸ்லிம் அமைப்புகள்  விமர்சித்துள்ளன.

இந்த நிலையில், இன்று 10 மாநிலங்களைச் சேர்ந்த   12 எஸ்டிபிஐ அலுவலகங்களில் அமலாக்கத்துறை  சோதனை நடத்தி வருகிறது.   டெல்லியில் SDPI தலைமையகம் உட்பட இரண்டு இடங்களில் சோதனைகள் நடந்து வருகின்றன, கேரளாவின் திருவனந்தபுரம் மற்றும் மலப்புரம், கர்நாடகாவின் பெங்களூரு, ஆந்திராவின் நந்தியால், மகாராஷ்டிராவின் தானே, தமிழ்நாட்டின் சென்னை, ஜார்க்கண்டின் பாகூர், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா, உத்தரபிரதேசத்தின் லக்னோ மற்றும் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் எஸ்டிபிஐ தேசியத் தலைவர் ஃபைசி கைதான நிலையில், அதன் தொடர்ச்சியாக இந்த  சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.