சென்னை:  பிரபல லாட்டரி தொழிலதிபரான  மார்டின், அவரது மருமகனும், விசிக நிர்வாகியுமான  ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் லாட்டரி அதிபர் மார்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தி வருகிறது. சென்னை  போயஸ் கார்டன் பகுதியில் உள்ள அவரது வீடு,  தியாகராய நகர் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெறுகிறது. போயஸ் கார்டனில் உள்ள ஆதவ் அர்ஜுனா வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கெனவே, கோவையில் உள்ள வீடு, அலுவலகத்திலும் சோதனையில் ஈடுபட்டநிலையில், மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜுனா தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அமலாக்கத்துறை சோதனை காரணமாக. சோதனைகள் நடைபெற்றும் பகுதியில்  மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

லாட்டரி அதிபர் மார்ட்டினை தொடர்ந்து, மார்ட்டினின் மருமகனும், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனாவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக,   இன்று அதிகாலை 5 மணிக்கு இவரது வீட்டிற்கு 2 கார்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டிற்குள் சென்றதும், வீட்டின் நுழைவு வாயிலை யாரும் உள்ளே நுழையாத படி பூட்டினர். வீட்டிற்குள் யாரையும் அனுமதிக்கவில்லை. வீட்டில் உள்ளவர்களையும் வெளியில் அனுமதிக்கவில்லை. வீட்டில் இருந்தவர்களின் செல்போன்களையும் வாங்கி வைத்து கொண்டனர்.

தொடர்ந்து வீட்டிற்குள் சென்ற அதிகாரிகள், வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று அங்குலம், அங்குலமாக அதிரடி சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது வீட்டில் இருந்த முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகவும் தெரிகிறது.

மார்ட்டின் வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் உள்ள அறைகள் உள்பட அனைத்து இடங்களிலும் சோதனை நடந்தது. சோதனையின் போது அலுவலகத்தின் நுழைவு வாயில், மற்றும் அலுவலக அறைகளின் கதவுகளையும் அடைத்திருந்தனர்.

இதேபோல் மார்ட்டினுக்கு சொந்தமான ஹோமியோபதி மருத்துவ கல்லூரியிலும் அமலாக்கத்துறை சோதனை நடந்தது.

சோதனையொட்டி கல்லூரிக்கு வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அடையாள அட்டை உள்ளிட்டவற்றை காண்பித்த பின்னரே கல்லூரிக்குள் அனுமதிக்கின்றனர்.

கோவையில் மார்ட்டின் வீடு, அலுவலகம், மருத்துவக்கல்லூரி என மொத்தம் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனையானது நடந்தது.

அமலாக்கத்துறை சோதனையையொட்டி சோதனை நடைபெற்ற இடங்களில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாகவே இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. சோதனை முடிவுக்கு பின்னரே முழுமையான விவரங்கள் தெரியவரும்.

கோவையில் நடந்து வரும் அமலாக்கத்துறை சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்புடன் அமலாத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.