சென்னை: அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் தொகுதி திமுக எம்.பியுமான அருண் நேரு மற்றும் அமைச்சர் நேருவின் சகோதரர் கேஎன். ரவிச்சந்திரன் இல்லங்களில் இன்று 2-வது நாளாக அமலாக்கத்துறை ரெய்டு தொடர்ந்து வருகிறது.
சட்டவிரோத பண பரிமாற்றம் புகாரின் பேரில், அமைச்சர் கே.என்.நேருவின் மகனான அருண்நேரு வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் இன்று 2வது நாளாக தொடர்கிறது. நேற்று அமைச்சர் நேரு, அவரது சகோதரர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் நடைபெற்ற சோதனைகள் முடிவுக்கு வந்த நிலையில், இன்று திமுக எம்.பி. அருண்நேரு, மற்றும் ஆர்.ஏ.புரத்தில் உள்ள அமைச்சர் நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனின் 2 இல்லங்களிலும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது. திருச்சி தில்லை நகரில் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் 10 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறையினரின் சோதனை நிறைவுபெற்றுள்ளது.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கே.என்.நேரு. இவர், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான, தி.மு.க., அமைச்சரவையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராக உள்ளார். இவரது மகன் அருண், பெரம்பலுார் தொகுதி தி.மு.க., – எம்.பி.,யாக உள்ளார். நேருவுக்கு மூன்று சகோதரர்கள். சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக அமைச்சர் நேரு, அவரது சகோதரர்கள், சகோதரி மற்றும் மகன் வீடு, அலுவலகம் என, 15க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று (ஏப்ரல் 7ந்தேதி) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அவர்களில் ஒரு தம்பியான, திருச்சி தில்லை நகரில் வசித்து வந்த ராமஜெயம், 2012ல் மர்ம நபர்களால் கடத்தி கொடூரமாக கொல்லப்பட்டார். தற்போது அந்த வீட்டில், அவரது மகன் மற்றும் மனைவி வசிக்கின்றனர். நேருவின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன். சென்னை ஆர்.ஏ.புரம், கிருஷ்ணாபுரி முதல் தெருவில் வசிக்கிறார்; மற்றொரு சகோதரர் மணிவண்ணன் என்ற சகோதரர் கோவையில் உள்ளார். அங்குள்ள டிவிஎச் கட்டுமான நிறுவனத்தை கவனித்து வருகிறார். நேருவின் சகோதரி உமா மகேஸ்வரி, பெரம்பலுாரில் வசிக்கிறார்.
நேருவின் சகோதரர்கள் மற்றும் அவரது மகன் பங்குதாரர்களாக உள்ள டி.வி.எச்., குழுமம், கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வருகிறது. காற்றாலை மின் உற்பத்தியிலும் நேருவின் குடும்பத்தினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிறுவனங்களின் முக்கிய நிர்வாகிகளாக, நேருவின் மகன் அருண், சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் உள்ளனர்.
கடந்த 2018ல் அமைச்சர் நேருவுக்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சிக்கிய முக்கிய ஆவணங்கள் வாயிலாக கிடைத்த தகவல்களை, வருமான வரித்துறை அதிகாரிகள், அமலாக்கத் துறையினருக்கு தெரியப்படுத்தினர்.
இதையடுத்து, நேரு மற்றும் அவரது உறவினர்களின் வங்கி கணக்குகளை, அமலாக்கத் துறையினர் கண்காணிக்கத் துவங்கினர். ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோர் வங்கி கணக்கில் பெரும் தொகை சமீபத்தில் வரவு வைக்கப்பட்டது. இதுவும், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரித்தபோது, சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் வழியே அந்த பணம் வந்தது தெரியவந்தது.
அதனால், சென்னை, திருச்சி, பெரம்பலுார் மற்றும் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், நேரு மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான, 15க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று காலை 6:00 மணி முதல் சோதனை நடத்தினர். மொத்தம், 10 மணி நேரம் சோதனை நடந்தது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அருணுக்கு சொந்தமான அரிசி ஆலை தொடர்பான நிறுவனம்; சென்னை ஆர்.ஏ.புரம், கிருஷ்ணாபுரி முதல் தெருவில் உள்ள ரவிச்சந்திரன் வீடு; மயிலாப்பூர் சி.ஐ.டி., காலனி அருகேயுள்ள, டி.வி.எச்., குழுமத்தின் முக்கிய நிர்வாகி பிரகாஷ் வீடு.
அடையாறு, காந்தி நகர் நான்காவது குறுக்கு தெருவில், வைத்தியநாதன் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், டி.வி.எச்., கட்டுமான நிறுவனத்தின் இயக்குநர் ரமேஷ் வீடு; சாஸ்திரி நகரில் உள்ள நேருவின் நெருங்கிய உறவினர்கள் வீடு போன்றவற்றிலும் சோதனை நடந்தது.
அடையாறு எல்.பி., சாலையில், டி.வி.எச்., அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரவிச்சந்திரனின் நெருங்கிய உறவினர்களான அறிவுநிதி, பிரேமலதா ஆகியோர் வீடுகளிலும், பல்வேறு இடங்களில் உள்ள டி.வி.எச்., கட்டுமான நிறுவன அலுவலகங்களிலும் சோதனை நடைபெற்றது.
திருச்சி தில்லை நகரில் நேரு மற்றும் அருண் ஆகியோர் கூட்டாக வசித்து வரும் வீடு, ராமஜெயம் வீடு, கோவை சிங்காநல்லுார் உப்பிலிபாளையம் பகுதியில் மணிவண்ணன் வீடு, பெரம்பலுாரில் உள்ள உமா மகேஸ்வரி வீடு போன்றவற்றிலும், மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சோதனை குறித்த தகவல் கிடைத்ததும், நேரு வீட்டின் முன் தி.மு.க.,வினர் குவிந்தனர். சோதனையில் பல்வேறு ஆவணங்களை, அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்து எடுத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.