முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்திற்குள் திடீரென சிபிஐ அதிகாரிகள் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மீது மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி, அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐ.என்.எக்ஸ். மீடியா தொலைக்காட்சி நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி ரூ. 305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுக்கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கு அவரது மகனும், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உதவினார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சி.பி.ஐ ஒரு குற்ற வழக்கும், சட்ட விரோத பண பரிமாற்ற பிரச்சனையில் அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் ஒரு வழக்கும் தொடுத்து அவை டில்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் தற்போது ஜாமீனில் உள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் போதிய ஒத்துழைப்பு தர மறுத்ததாக அமலாக்கப்பிரிவு சிபிஐ நீதிமன்றத்தில் கூறி, அவரை கைது செய்து விசாரிக்க கோரிக்கை வைத்திருந்தது. இதன் காரணமாக தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது விசாரணை நடத்தப்பட்டு, இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

மேல் முறையீட்டு நடவடிக்கைகளுக்காக சிதம்பரத்திற்கு 3 நாள் இறுதி அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய சிபிஐ தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. டெல்லி ஜோர்பாக்கில் உள்ள ப.சிதம்பரத்தின் இல்லத்திற்கு வந்த சிபிஐ அதிகாரிகள், வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிதம்பரம் அங்கு இல்லாத காரணத்தால், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

சிதம்பரத்தின் இல்லத்திற்கு திடீரென சிபிஐ அதிகாரிகள் வந்து சென்றது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.