சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) அகலப்படுத்தும் திட்டம் தொடர்பான வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.
திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை நான்கு வழி உயர்மட்ட சாலை அமைப்பதும், ஈசிஆர் சாலையை ஆறு வழியாக அகலப்படுத்துவதும் இந்த திட்டத்தில் அடங்கும். இதற்கான மொத்த செலவு ₹2,100 கோடி ஆகும்.
இந்த திட்டத்துக்கான டெண்டர் முறையில் முறைகேடு நடந்ததாக கூறி, போபாலில் உள்ள திலீப் பில்ட்கான் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி பி.டி. ஆஷா தள்ளுபடி செய்தார். மேலும், 2026 ஜனவரி 5 அன்று வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவும் ரத்து செய்யப்பட்டது.

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் (TANSHA), ஹைதராபாத் சேர்ந்த KNR கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக நடந்து கொண்டதாக திலீப் பில்ட்கான் நிறுவனம் குற்றம்சாட்டியது.
2025 ஆகஸ்ட் 25 அன்று விடப்பட்ட டெண்டரில் தாங்களும் பங்கேற்றதாகவும், ஆனால் 2025 டிசம்பர் 24 அன்று எந்த காரணமும் சொல்லாமல் தங்களின் தொழில்நுட்ப டெண்டர் நிராகரிக்கப்பட்டதாகவும் மனுவில் கூறப்பட்டது.
மேலும், கேரளாவில் தேசிய நெடுஞ்சாலை 66-ல் சாலை இடிந்து விழுந்த சம்பவம் காரணமாக, 2025 மே மாதத்தில் KNR நிறுவனம் கருப்புப் பட்டியலில் (blacklist) சேர்க்கப்பட்டதாகவும், அதற்காகவே டெண்டர் கடைசி தேதியை நீட்டித்து அந்த நிறுவனத்திற்கு TANSHA சாதகமாக நடந்துகொண்டதாகவும் மனுதாரர் கூறினார்.
இதற்கு பதிலளித்த KNR கன்ஸ்ட்ரக்ஷன்ஸ், தங்களை ஒரு மாதத்திற்கு மட்டுமே கருப்புப் பட்டியலில் சேர்த்ததாகவும், அந்த காலம் டெண்டர் அறிவிப்புக்கு முன்பே முடிந்துவிட்டதாகவும் தெரிவித்தது.
மேலும், தங்களுக்கு விதிக்கப்பட்ட இடைநீக்கம் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாகவும், 2025 ஜூலை 18 அன்று, அந்த இடைநீக்கம் ஜூலை 11-ல் முடிவடைந்தது என நீதிமன்றம் தெளிவாக கூறியதாக KNR விளக்கம் அளித்தது.
இந்த தகவல்களை டெண்டர் சமர்ப்பிக்கும் போதே TANSHA-க்கு தெரிவித்ததாகவும், எனவே தங்களுக்கு ஆதரவாக நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்த அடிப்படையும் இல்லை என KNR வாதிட்டது.
நாடு முழுவதும் பல முக்கிய கட்டுமான திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளதாகவும், கோவை அவினாசி சாலையில் 10.10 கி.மீ நீள உயர்மட்ட சாலை திட்டத்தையும் தாங்களே அமைத்ததாகவும் KNR தெரிவித்தது.
இதற்கிடையில், TANSHA, டெண்டர் செயல்முறை இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில், மனுதாரர் அவசரமாக நீதிமன்றத்தை அணுகியதாக தெரிவித்தது. தற்போது பேச்சுவார்த்தைகள் மட்டுமே நடைபெற்று வருவதாகவும், டெண்டர் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் கூறியது.
இந்த அனைத்து வாதங்களையும் பரிசீலித்த நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்தது.
[youtube-feed feed=1]