வயநாடு
பொருளாதாரம் வளர்ச்சி அடைய கார்ப்பரேட்டுகளுக்கு பணம் அளிக்காமல் ஏழைகளுக்கு அளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
வரும் 6 ஆம் தேதி அன்று கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. கேரளாவில் தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு பகுதியில் உள்ள பல இடங்களுக்குச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.
தனது தேர்தல் பிரசார உரையில் ராகுல் காந்தி, “பிரதமர் மோடி மிகப்பெரிய கார்ப்பரேட்டுகளிடம் பணத்தை வழங்கினால் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்குத் திருப்பிவிடலாம் என நம்புகிறார். மிகப்பெரிய கார்ப்பரேட்டுகளிடம் பணத்தைக் கொடுத்தால், அதை நாட்டிலிருந்து வெளியே கொண்டு சென்றுவிடுவார்கள்.
காங்கிரஸ் கட்சியிடம் நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்ப்பதற்குத் தீர்வுகள் உள்ளன. நாங்கள் கேரளாவின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்ல, நாங்கள் நியாய் திட்டத்தைச் செயல்படுத்த கூறுகிறோம். நியாய் திட்டத்தால் ஏழை மக்கள் மட்டுமல்ல, கேரளப் பொருளாதாரத்தையும் ஊக்கப்படுத்தலாம், வேலைவாய்ப்பும் பெருகும்.
நியாய் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குத் திருப்ப விரும்பினால், முதலில் பணத்தை ஏழை மக்கள் கைகளில் கொடுக்க வேண்டும், சாமானிய மக்களின் கைகளில் பணம் புழங்க வேண்டும்.
நாட்டின் பொருளாதாரத்தை வேகப்படுத்த விரும்பினாலோ, வேலைவாய்ப்பை உருவாக்க விரும்பினாலோ, முதலில் செய்ய வேண்டியது, பணத்தைப் பொருளாதாரத்தில் செலுத்த வேண்டும். பிரதமர் மோடியோ கார்ப்பரேட்டுகளிடம் பணத்தை வழங்குகிறார்.
மத்திய பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிராகக் கொண்டு வந்துள்ள 3 கிரிமினல் சட்டங்களைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி எதிர்த்து வருகிறது, நாங்கள் இனியும் அவற்றை எதிர்ப்போம்” எனத் தெரிவித்துள்ளார்