சென்னை: பீகார் சட்டமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு இன்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம் 7 கேள்விகளை எழுப்பி உள்ளார்.

பீகாா் மாநிலத்தில் வரும் நவம்பா் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14ந்தேதி நடைபெறம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதைத் தொடா்ந்து, பீகாா் மாநிலத்தில் தோ்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. மேலும், எந்தவொரு அரசியல் கட்சி வேட்பாளா் அல்லது தோ்தலுடன் தொடா்புடைய நபா்கள் அரசு வாகனங்கள் அல்லது அரசு தங்குமிடங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் பொதுக் கருவூலத்தின் செலவில் விளம்பரங்களை வெளியிடுவதை தடை செய்வது தொடா்பான உத்தரவுகளை பிகாா் மாநில தலைமைச் செயலருக்கு தோ்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொய் தகவல்களைப் பரப்பக் கூடாது என்று தோ்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. இருகட்டமாக நடைபெறும் சட்டப் பேரவைத் தோ்தலில் காவல் துறையினா், துணை ராணுவப் படையினா் என பல்வேறு படைப் பிரிவினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவாா்கள் என்று மாநில காவல் துறை தலைவா் டிஜிபி வினய் குமாா் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் 7 கேள்விகளை எழுப்பி உள்ளார். . இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது: நான் இந்திய தேர்தல் ஆணையத்தை எந்த தவறும் செய்ததாக குற்றம் சாட்டவில்லை, ஆனால் பிகார் இறுதி வாக்காளர் பட்டியல் குறித்த பின்வரும் கேள்விகளுக்கான பதில்களை இந்திய மக்களும் பிகார் மக்களுக்கும் தெரிந்து கொள்ள உரிமை உண்டு. அதன்படி,
- மத்திய அரசின் மதிப்பீட்டின்படி, பிகாரில் வயது வந்தோர்(18 வயது பூர்த்தியடைந்த) மக்கள்தொகை எவ்வளவு?
- பீகார் வாக்காளர் பட்டியலில் வயது வந்தோர் மக்கள்தொகையில் எத்தனை சதவீதம் பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளது? அது 90.7 சதவீதமா?
- மீதமுள்ள 9.3 சதவீத வயது வந்தோர் மக்கள்தொகையின் நிலை என்ன? அவர்கள் ஏன் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை?
- வாக்காளர் பட்டியலில் எத்தனை பெயர்கள் தகுதியில்லாதவை? அதன் எண்ணிக்கை சுமார் 24,000 ஆக இருக்குமா?
- வாக்காளர் பட்டியலில் எத்தனை வீட்டு எண்கள் காலியாக உள்ளன அல்லது தகுதியில்லாதவை? அந்த எண்ணிக்கை 2,00,000- க்கு மேல் இருக்குமா?
- வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள எத்தனை பெயர்கள் இரட்டை அல்லது நகல் பதிவுகள்? இந்த எண்ணிக்கை சுமார் 5,20,000 ஆக இருக்குமா?
- வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை கருத்தில் கொண்டு, தேர்தல் ஆணையம் இந்த கேள்விகளுக்கு தயவுசெய்து பதிலளிக்குமா?
என ஏழு கேள்விகளை சிதம்பரம் முன்வைத்துள்ளார்.
