சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே – 2 ந்தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கையின் போதும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகும் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6ந்தேதி முடிவடைந்த நிலையில், மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கிடையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது எடுக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தொடரப்பட்ட வழக்கில், தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு காரணம் தேர்தல் ஆணையம் என்று குற்றம்சாட்டிய உயர்நீதிமன்றம், மே2ந்தேதி வாக்குப்பதிவு அன்று எடுக்கப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து வழக்கின் இன்றைய விசாரணையின்போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. அதில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகளைக் கருத்தில் கொண்டு மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்றும், அதற்குப் பிறகும் எந்தவொரு வெற்றி விழாக்கள், ஊர்வலங்கள், கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.