சென்னை,
நாளை நடைபெற இருந்த ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் மே 25ந்தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு கடந்த வெள்ளியன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில் யாரும் வாக்களிக்கக்கூடாது என பயங்கரவாதிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் வாக்குப்பதிவின்போது, வாக்களிக்க வந்தவர்களின்மீது பயங்கரவாதிகளுக்கு ஆதரவானவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
பட்காம் மாவட்டத்தில் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டவர்களை தடுக்க முயன்ற பாதுகாப்பு படையினருக்கும், வன்முறையாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதில் 8 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர்.
இதன் காரணமாக அந்த தொகுதி முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் வாக்களிக்க வெளியே வரவில்லை. 7 சதவிகித வாக்குகள் மட்டுமே பதிவானது.
மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கான இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு முதல்வர் மெஹபூபா முஃப்தி யின் சகோதரரும், அத்தொகுதி மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பிடிபி) வேட்பாளருமான தஸதுக் முஃப்தி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அதில், மாநிலத்தின் தற்போதைய நிலவரம் தேர்தல் நடத்துவதற்கு உகந்ததாக இல்லையென்றும், தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இதையடுத்து மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலைமையை கருத்தில்கொண்டு, அனந்தநாக் நாடாளுமன்ற தொகுதிக்கும் நாளை நடைபெறவிருந்த இடைத்தேர்தல் மே 25ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது தேர்தல் ஆணையம்.