சென்னை: காவல்துறையில் சீருடை பணியாளர் தேர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும்கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, சீருடை பணியாளர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNUSRB) சார்பாக இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் என மொத்தம் 10906 காலிப்பணியிடங்களுக்கான உடற்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுகள் ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் ஏப்ரல் 28 ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இந்த தேர்வுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன.
அதன் படி இந்த தேர்வுகளில் கலந்து கொள்ள கொரோனா நெகடிவ் சான்றிதழ் காட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிகமாக பரவி வருவதால் இந்த நேரத்தில் இந்த தேர்வுகள் ஒத்திவைக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் கொரோனா காலத்தில் கூட்டமாக அதிகம் பேர் கூடினால் நோய் பரவும் அபாயமும் இருந்தது.
இதனை தொடர்ந்து தற்போது TNUSRB சார்பாக நடத்தப்படும் TN Police Constable PMT/PET தேர்வுகள் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் மீண்டும் இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை டிஜிபி வெளியிட்டார். அதில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு குழுமம் (TNUSRB) சார்பாக இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்புத்துறை காவலர் பணியிடங்களுக்கான ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற உள்ள உடற்தகுதி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.