திருமலை:
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிபாரிசு கடிதங்களுக்கு தரிசனம், அறைகள் வழங்க முடியாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக மத்திய, மாநில அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் அவர்களது சிபாரிசு கடிதங்ளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது. சிறப்பு தரிசனம் மற்றும் அறைகள் ஒதுக்கீடுக்கு அனுமதி வழங்கக் கோரி, பல மாநில எம்பி., எம்.எல்.ஏக்களின், மத்திய மாநில அமைச்சர்கள் கடிதம் கொடுப்பது வழக்கம்.
ஆனால், தற்போது நாடு முழுவதும் உள்ள மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளான எம்பி., எம்.எல்.ஏக்கள் வழங்கக்கூடிய முன்னுரிமைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக கோவில் இணை செயல் அலுவலர் சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.
சுவாமி தரிசனம் செய்ய வரும் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஏழுமலையான் கோவிலுக்கு முன்பு அரசியல் சார்ந்து பேசக்கூடாது என்றும் சீனிவாசராஜு தெரிவித்துள்ளார்.