டில்லி
தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியை அவதூறாகப் பேசியதாகக் கூறி ராகுல் காந்திக்குத் தேர்தல் ஆணையம் நோட்டிஸ் அனுப்பி உள்ளது.
வரும் 25 ஆம் தேதி அன்று ராஜஸ்தானில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியைத் தக்க வைக்க, காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க வும் கடும் போட்டியில் உள்ளன அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பொதுக் கூட்டங்களில் பேசி வருகிறார். அப்போது அவர் ஒரு தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடியை பிக்பாக்கெட் ஆசாமிகளுடன் ஒப்பிட்டுப் பேசியதாகத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. அந்த நோட்டிசில் ராகுல் காந்தி பேசியது குறித்து வரும் 25,ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது.