சென்னை: ராணிபேட்டையில் வாக்காளர்களுக்கு தர வைக்கப்பட்டிருந்த ரூ.91.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலையொட்டி பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின் போது உரிய ஆவணமின்றி வாகனங்களில் எடுத்துச்செல்லும் பணத்தை அவர்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இன்று காலையில் ராணிபேட்டையில் ரூ. 91.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. வாக்காளர்களுக்காக அந்த தொகுதியின் அதிமுக வேட்பாளர் சுகுமார் வினியோகிக்க பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் என்று கூறப்படுகிறது.
இந் நிலையில், தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடிக்கு மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். இது குறித்து அவர் கூறி இருப்பதாவது:
தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடியே 11 லட்சம் மதிப்புள்ள பணம், பொருட்களை பறக்கும் படையினர், கண்காணிப்பு குழுவினர் கைப்பற்றி உள்ளனர். அதில் பணம் மட்டும் ரூ.210.68 கோடியாகும்.
ராணிபேட்டையில் இன்று காலை ரூ.91.67 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அதைபோல் கோவையில் ரூ.98 லட்சம், சிவகாசியில் ரூ.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சைதை தொகுதி ரூ.1.3 கோடி, பாளையங்கோட்டை ரூ.12.17 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.