டில்லி:

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கோலாரஸ், முங்கஒலி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த மாதம் இடைத்தேர்தல் நடந்தது. இதில் கோலாராஸ் தொகுதியில் இறந்த 12 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தது தெரியவந்தது. இதேபோல் முங்கஒலி தொகுதியில் ஆயிரத்து 500 பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இந்த தகவல் தேர்தல் ஆணைய கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து முதன்மை செயலாளர் அந்தஸ்திலான அதிகாரி தலைமையில் வாக்காளர் பட்டியலை சிறப்பு தணிக்கை செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது. சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு 3 அல்லது 4 மாதங்கள் முன்னதாக வாக்காளர் பட்டியல் தணிக்கை செய்யப்படுவது வழக்கம். இந்த வகையில் மத்திய பிரதேசத்தில் வழக்கமான தணிக்கை முடிந்து சிறப்பு தணிக்கை நடந்து வருகிறது.

இந்த இரு தொகுதிகளில் இடைத்தேர்தலில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்ல காங்கிரஸ் எம்பி ஜோதிரதித்தியா ஆகியோர் அவரவர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றி பெற்றனர். வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் குரல் கொடுத்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டரை இடமாற்றம் செய்து, கூடுதலாக துணை ராணுவப் படையினரை பாதுகாப்பு பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தியது. இரு தரப்பும் தங்களது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தியதால் பதற்றம் நிலவியது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் எதிர்கட்சித் தலைவர் அஜய் சிங், ம.பி.காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருண் யாதவ் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து வாக்காளர் பட்டியலில் அதிகளவில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்கள் மட்டுமின்றி சிலரது பெயர்கள் திரும்ப திரும்ப இடம்பெற்றிருப்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.