மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த 21 நாட்களுக்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி தப்பித்து விடும் வாய்ப்பு உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக, சிவசேனா இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் சிவசேனா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி வகித்து வருகிறார்.
அவர் எம்எல்ஏவாக தேர்வு பெறாத நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்வராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.
அரசியல் சாசனப்படி, முதல்வர் அல்லது அமைச்சராக பொறுப்பேற்பவர் 6 மாதத்திற்குள்ளாக சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் அவர்களது பதவி பறிபோய் விடும்.
இதனால் உத்தவ் தாக்கரே இந்த மாதம் 28ந்தேதிக்குள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற அலுவல்கள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பணிகள் நிறுத்தப்பட்டதாலும், உறுப்பினராக ஆகுவதற்கான கடைசி நாள் மே 28 நெருங்கி வருவதால் உத்தவ் தாக்கரேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கு 8 இடங்கள் காலியாக உள்ள எம்எல்சி தேர்தலை உடனே நடத்த கவர்னருக்கு மாநில அமைச்சரவை பரிந்துரை செய்தது. மேலும் உத்தவ் தாக்கரே பிரதமருடன் பேசியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து கவர்னர் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உடனே தேர்தல் நடத்த பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து அடுத்த 21 நாட்களுக்குள் மாநிலத்தில் எம்எல்சி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மகாராஷ்டிராவில் 9 எம்.எல்.சி. இடங்கள் காலியாக உள்ளன. இதில் ஒரு இடத்தில் உத்தவ்தாக்கரே போட்டியிட்டு முதல்வர் பதவியை தக்க வைத்துக்கொள்வதற்கு ஏதுவாக தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் சிவசேனாவினர் உற்சாகத்தில் உள்ளனர்.
மும்பை: