புதுடெல்லி: ஒருதலைபட்சமான வருமான வரித்துறை சோதனை குறித்து எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து, மத்திய நேரடி வரி வாரியத்தின் தலைவர் மற்றும் வருவாய்த்துறை செயலாளரை, விளக்கம் கேட்க அழைத்துள்ளது தேர்தல் கமிஷன்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; வருவாய்த்துறை செயலாளர் ஏ.பி.பாண்டே மற்றும் மத்திய நேரடி வரி வாரியத் தலைவர் பி.சி.மோடி ஆகியோரை விளக்கம் கேட்க அழைத்துள்ளது தேர்தல் ஆணையம்.
மத்திய பாரதீய ஜனதா அரசு, தனது ஏஜென்சிகளை தேர்தல் நேரத்தில், எதிர்க்கட்சிகளைப் பழிவாங்குவதற்காக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுகளையடுத்தே, இந்த விளக்கம் கேட்கும் படலம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் இதுபோன்ற சோதனைகள், நடுநிலையானதாகவும், பாரபட்சமற்றதாகவும் இருக்க வேண்டுமென, மத்திய நிதி அமைச்சகத்திடம் அழுத்தமாக வலியுறுத்தியுள்ளது தேர்தல் ஆணையம்.
இதுதவிர, தேர்தல் அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பாக விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்தில், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில், எதிர்க்கட்சிகளை குறிவைத்து, வருமான வரித்துறை சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த நடவடிக்கைகள் கடும் சர்ச்சையைக் கிளப்பின என்பது நினைவிருக்கலாம்.
– மதுரை மாயாண்டி