சென்னை: ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் நிலையில், மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் தடையுத்தரவு ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அதுகுறித்து அறிவிப்பு எதுவும் இன்னும் வெளிவராத நிலையில், ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.
இதனால், மின் கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவையும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது; மார்ச் 25ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதிவரை செலுத்த வேண்டிய மின் கட்டணத்தை, மே 30ம் தேதிக்குள் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மின் கட்டணம், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதம் செலுத்திய மின் கட்டணத்தின் கணக்கைக் கொண்டு கணக்கிடப்பட்டு, அத்தொகை வசூலிக்கப்பட உள்ளது. மின் கட்டணத்தை இணைய வழியாக செலுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.