கோவை: மின்வாரிய இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் விவகாரத்தில் மின்துறை அமைச்சர் அமைச்சர் செந்தில் பாலாஜி மக்களை குழப்பி வருகிறார். ஏற்கனவே மின் கட்டண உயர்வு விவகாரத்திலும், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் என்று கூறி கண்ணாமூச்சி ஆடியது போல, தற்போது மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைப்பு விவகாரத்திலும் மீண்டும் கண்ணாமூச்சி ஆடி வருகிறார்.
இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி 5 இணைப்புகள் இருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என கூறியுள்ளார். ஏற்கனவே இரு இணைப்புக்கு மேல் மின் இணைப்பு வைத்திருப்பவர்களிடம், வணிக ரீதியிலான மின் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறியிருந்த நிலையில், தற்போது மாற்றி பேசியிருப்பது மக்களிடையே மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினருக்கும் மானிய விலையில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கும் நெசவாளர்களுக்கும் இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது திமுக அரசு, 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டுமெனில், மின்வாரிய இணைப்பு எண்ணுடன், ஆதார் எண் இணைக்க வேண்டும் என கெடுபிடி செய்து வருகிறது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் உள்பட பொதுமக்களும், கடுமையாக எதிர்ப்புகளை தெரிவித்தத நிலையில், திமுக அரசு, அதை கண்டுகொள்ளாமல், நினைத்தை சாதிக்கும் வகையில் பணிகளை முன்னெடுத்து வருகிறது.
ஏற்கனவே மின்வாரிய கட்டணம் உயர்த்தப்படும்போது மக்களின் கருத்து கேட்டு முடிவு செய்வோம் என்று கூறிய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில், மின்கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், அதை மீறி, திட்டமிட்டபடி மின் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவித்தார். இதனால் மக்களிடம் நடத்தப்பட்ட கருத்து கேட்பு கூட்டம் ஒரு நாடகம் என்று விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதிலும் நாளுக்கு ஒரு தகவல்களை கூறி, மக்களை மீண்டும் ஏமாற்றி வருகிறார் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி.
ஏற்கனவே 21ந்தேதி செய்தியாளர்களை சந்தித்தபோது, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகளைத் தொடங்கி உள்ளோம். இது குறித்து மின் நுகர்வோருக்கு எஸ்எம்எஸ் மூலம் மெசேஞ்கள் அனுப்பப்படுகிறது. மின் நுகர்வோர் மின் இணைப்புடன் ஆதாரை எண்ணை இணைத்தால் தான் 100 யூனிட் மின்சாரம் வழங்கப்படும் எனச் சிலர் இணையத்தில் திட்டமிட்டு பொய்யான தகவல்கள் பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் பொய்யான தகவல். இதற்கும் இலவச மின்சாரத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை.
மின்சாரம் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விநியோகம், கட்டண அளவு உள்ளிட்டவை குறித்த தரவுகளை பெற பணிகள் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாகவே மின் நுகர்வோர் தரவுகளைப் பெறவே ஆதார் எண்ணை இணைத்து வருகிறோம். முன்பு 1.15 மின் நுகர்வோர் தரவுகள் மட்டுமே இருந்த நிலையில், இப்போது 3 கோடிக்கும் மேற்பட்ட மின் நுகர்வோரின் தரவுகளை திரட்டி உள்ளோம் என்றார்.
பின்னர் அடுத்த ஓரிரு நாளில் செய்தயாளர்களை சந்தித்தபோது, ஒரு இணைப்பிற்கு மட்டுமே 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் பொய்யான தகவல்கள் மக்களிடையே பரப்பப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தியவர், அதுகுறித்து அதிகாரப்பூர்வமான விளக்கத்தை தெரிவிக்காமல், எப்போதும்போல அது வதந்தி என்று மறுப்பு தெரிவித்து வருகிறார்.
சென்னை போன்ற பல இடங்களில், லைன் வீடுகள், அடுக்குமாடி வீடுகளை வாடகைக்கு விடுபவர்கள், அனைத்து வீடுகளுக்கும் தனித்தனி மீட்டர் பொருத்தி, மின் கட்டணம் வசூலித்து வருகின்றனர். இதை அறிந்துகொள்ளும் வகையில்தான் தமிழகஅரசு, மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வலியுறுத்தி வருவதாக அமைச்சரும், மின் வாரியமும் விளக்கம் தெரிவித்து வருகிறது. அதேபோல ஒருவர் பெயரில் 3, 4 மின் இணைப்புகளை வைத்துள்ளார் என்றால், ஆதார் எண் இணைக்கப்பட்ட உடன் பரவுகிறது. ஆதார் இணைப்பிற்கு பிறகும் கூட அவரிடம் இருக்கும் அனைத்து மின் இணைப்புகளுக்குமே இலவச மின்சாரம் வழங்கப்படும். மின் வாரியத்திடம் மின் நுகர்வோர் குறித்த தகவல்கள் இல்லை. அதைப் பெறவே ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கை” என்றார். ஆனால், இதுபோன்ற தனித்தனி மீட்டர் பொருத்துவதை தடுக்கத்தான், ஆதார் இணைப்பு நடவடிக்கையா என்பதை தெளிவாக பொதுமக்களிடம் விளக்க மின்வாரியம் தவறி வருகிறது.
இந்த தகவல்கள் பொதுமக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மற்றொரு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒருவரது பெயரில் இரு மின் இணைப்புகள் இருந்தால் அவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும், அதற்கு மேல் உள்ள இணைப்புகளுக்கு வணிக ரீதியிலான மின் கட்டணம் வசூலிக்கப்படும் என கூறியிருந்தார். இதைத்தான் மின்வாரிய ஊழியர்களும் உறுதி செய்துள்ளனர். ஆனால், இந்த இந்த விஷயத்தில், மின்வாரியமும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் அடுத்தடுத்து மாற்றி மாற்றி வெளியிடும் தகவல்கள் மக்களை மேலும் மேலும் குழப்பி வருவதுடன், திமுக அரசு மீதான அதிருப்தியையே மக்களிடம் வளர்த்து வருகிறது.
இதுமட்டுமின்றி, ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 3 மாதமாவது அவகாசம் வழங்கப்படுவது வாடிக்கை. ஆனால், தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் திமுக அரசு மிக அவசரம் காட்டி வருகிறது. ஏன் இவ்வளவு அவசரம் காட்டப்படுகிறது என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுமக்கள் இருகுறித்து முறையான விளக்கம் பெற சிறிது காலம் தேவை எனும்போது, அதற்கான அவகாசம் வழங்கப்படாமல், மின்கணக்கிடு பெற்றவர்கள் உடனே ஆதார் எண்ணை இணைத்தால் தான் மின் கட்டணம் கட்ட முடியும் என்றும், இல்லையேல் மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனும் மிரட்டல் போக்கில் செயல்படுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக அரசுக்கு அழகல்ல.
ஒருமுறை செய்தியாளர்களை சந்திக்கும்போது மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க காலக்கெடு இல்லை என்று அமைச்சர் கூறி வருகிறார், ஆனால் மற்றொருபுறம், மானியம் பெறுபவர்கள் கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மாத இறுதிக்கட்டத்தில் வந்து, ஆதார் எண்ணை இணைத்தால்தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என மிரட்டல் விடுத்துள்ளது.
இதனால் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு, இணையதளம் மூலமும், இணையதள வசதி இல்லாதவர்கள், நெட் சென்டர்கள் மூலம் ஆதார் எண்ணை இணைக்க முயற்சித்ததால், மின்வாரிய சர்வர் முடங்கியது. இதையடுத்து தற்போது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கி மின் வாரியம் உத்தரவிட்டது. மேலும், ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், மின் வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தலாம் என தெரிவித்து அதற்கான சிறப்பு கவுண்டர்களும் திறக்கப்பட்டு உள்ளது.
இந்த நடவடிக்கையை மின்வாரியம் முன்னமேயே தொடங்கியிருந்தால், கடைசிநேர பரபரப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், அதை செய்ய தவறியதால், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியதுடன், தற்போது மின் வாரிய எண்ணுடன் ஆதார் எண் இணைக்க டிசம்பர் 30ந்தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படுவதாக அறிவித்து உள்ளது.
ஒரு மாதம் ஆதார் எண்ணை இணைக்க அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், இந்த மாதம் இன் கட்டணம் செலுத்துபவர்களுக்கு ஏன் அந்த 2 நாள் அவகாசம். அதை நீட்டிப்பு செய்திக்கலாமே. இந்த விஷயத்தில் ஏன் இவ்வளவு முரண்பாடு என்பது தெரியவில்லை.
இந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று (28ந்தேதி) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒருவர் 5 இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்று கூறியிருக்கிறார். மேலும், தமிழகத்தில் 2.33 கோடி பேரில் இதுவரை 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளார்கள். நஷ்டத்தில் இயங்கும் மின் வாரியத்தை சீரமைக்கவே ஆதார் எண் இணைக்கப்படுகிறது. டிசம்பவர் 31 வரை ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெறும். ஆதார் எண்ணை இணைத்தாலும் தற்போது உள்ள நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. அச்சப்பட வேண்டாம். ஏற்கெனவே அமலில் உள்ள திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
சிறப்பு முகாமில் மின் இணைப்பு எண்ணை பெயர் மாற்றமும் செய்யலாம். இலவச மின்சாரம் பெறும் குடிசைவாழ் மக்களும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கூறியிருப்பதுடன், எவ்வளவு பேர் வாடகை வீடுகளில் குடியிருக்கிறார்கள் என்ற விவரம் அரசிடம் இல்லை. மின் இணைப்பு பெற்றவர்களில் எத்தனை பேர் சொந்த வீட்டில் வசிக்கிறார்கள் என்ற விவரம் அரசிடம் இல்லை அதற்குதான் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளார்.
மேலும், ஆதார் எண்ணை இணைப்பதால், 100 யூனிட் மின்சார மானியம், சிறு குறு மின்சார மானியம், நெசவு, விசைத்தறி, கைத்தறி மின்சார மானியம் ஆகியவை பாதிக்கப்படாது. தமிழ்நாடு மின்சாரவாரியம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் 1.59 லட்சம் கோடி கடன் இருக்கிறது. அதற்காக கடந்த ஆண்டு மட்டும் 16,511 கோடி வட்டி கட்டப்பட்டுள்ளது எனும் அதிர்ச்சி தகவலையும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
அமைச்சரின் இன்றைய பேட்டியை பார்க்கும்போது, ஒருவர் அதிகபட்சமாக 5மின் இணைப்புகள் வரை வைத்திருந்தால் அவர்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படுவது உறுதிபோல தெரிகிறது. ஏற்கனவே 2 இணைப்புக்கு மேல் இருந்தால் வணிக கட்டணம் வசூலிக்கப்படும் என கூறியிருந்த நிலையில், தற்போது, 5 மின் இணைப்புகள் இருந்தாலும் இலவச மின்சாரம் தொடரும் என்ற கூறியிருப்பது, குழப்பத்தையே ஏற்படுத்தி உள்ளது.
மின் கட்டணம் உயர்வுக்கு காரணமாக மத்தியஅரைசை மாநில திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், கெஜ்ரிவால் தனது மாநிலமான டெல்லியில் ஒரு மின் இணைப்புக்கு 300 யூனிட்வரை மின்சாரம் இலவசமாக வழங்கி வருகிறார். பஞ்சாப் மாநிலத்திலும் நடைமுறைப்படுத்தி உள்ளார். தற்போது குஜராத் மாநில தேர்தல் அறிக்கையிலும் கூறி உள்ளார். அங்கெல்லாம் மத்தியஅரசு இலவச மின்சாரம் வழங்குவதை ரத்து செய்ய வலியுறுத்தவில்லையா? ஆம்ஆத்மி அரசால் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்போது, தமிழக அரசால் ஏன் முடியவில்லை என்பது குறித்து பொதுமக்களிடம் விளக்க வேண்டியது திமுக அரசின் கடமை.
தமிழ்நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் முதல் 100 யூனிட் மின்சாரம் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. தற்போதை அதில் கைவைக்க திமுக அரசு முடிவு செய்துள்ளது என்பதே மின்இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு நடவடிக்கை அம்பலப்படுத்தி உள்ளது. ஏற்கனவே பல்வேறு அரசு திட்டங்களுக்கு உதவி பெற ஆதாரை இணைக்க மத்தியஅரசும், கடந்த அதிமுக அரசும், வலியுறுத்தியபோது, அதை கடுமையாக எதிர்த்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுதான் தற்போது மின்சாரம், சொத்து என பல திட்டங்களுக்கும் ஆதாரை இணைக்க கட்டாயப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட பல நலத்திட்டங்கள் திமுக ஆட்சியாளர்களால் ரத்து செய்யப்பட்ட நிலையில், (பெண்களுக்கான இலவச ஸ்கூட்டர், தாலிக்கு தங்கம், பள்ளி மாணாக்கர்களுக்கான இலவச கணினி உள்பட பல திட்டங்கள்) தற்போது 100 யூனிட் இலவச மின்சார திட்டத்தையும் ரத்து செய்ய தமிழகஅரசு முடிவு செய்துள்ளதோ என்ற சந்தேகங்களை பொதுமக்களிடையே உருவாக்கி உள்ளது.
ஏற்கனவே திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதற்கு மாறாக வீட்டு வரி, சொத்து வரி, கழிவுநீர், குடிநீர் வரி, மின்சார கட்டணம் போன்றவற்றை கடுமையாக உயர்த்தி மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதையும் ரத்து செய்ய துடிப்பது மக்களிடையே திமுக அரசு மீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.