ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இன்று (மே 18) அதிகாலை 5.59 மணிக்கு விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் 101வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி.சி.,61ல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், திட்டம் தோல்வி அடைந்தது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோவின், 101வது ஏவுதல் இன்று காலை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், PSLV-C61 செயல்திறன் 2வது நிலை வரை இயல்பாக இருந்தது. 3வது கட்டத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், அதன் காரணமாக, பணியை நிறைவேற்ற முடியவில்லை என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து நாட்டின், பாதுகாப்பு மற்றும் புவி கண்காணிப்பிற்காக 1, 696 கிலோ எடை கொண்ட EOS-09 என்ற செயற்கைக் கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் வடிவமைத்தனர். இந்த செயற்கை கோள் இன்று அதிகாலை விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் நேற்று காலை தொடங்கியது.
இதையடுத்து இன்று காலை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி.சி., 61 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் இன்று அதிகாலை 5.59 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தபட்டது. ராக்கெட் மற்றும் செயற்கைக் கோள் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் கவனித்து வருகின்றனர். பி.எஸ்.எல்,வி., சி-61 ராக்கெட் திட்டமிட்ட பாதையில் செல்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஆனால், துரதிருஷ்டவசமாக ராக்கெட்டின் இரண்டு அடுக்குகள் வெற்றிகரமாக பிரிந்த நிலையில், 3வது அடுக்கு பிரிந்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் திட்டம் தோல்வி அடைந்தது.

இதையடுத்து, இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறியதாவது: இன்று 101வது ஏவுதல் முயற்சிக்கப்பட்டது, PSLV-C61 செயல்திறன் 2வது நிலை வரை இயல்பாக இருந்தது. 3வது கட்டத்தில் ஒரு கண்காணிப்பு காரணமாக, பணியை நிறைவேற்ற முடியவில்லை. பி.எஸ்.எல்.வி.சி.,61 ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. ஆய்வுக்கு பின் விரிவான தகவல் தெரிவிக்கப்படும், என்றார்.
இன்று செலுத்தப்பட்ட ராக்கெட்டில், RISAT எனப்படும் ரேடார் இமேஜிங் சாட்டிலைட் சீரிஸின் 7வது செயற்கைகோளாக, EOS – 09 திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் சக்திவாய்ந்த C – பேண்ட் சிந்தெடிக் அபெர்ட்சுர் ரேடார் இடம்பெற்று இருந்தது. இது இரவு, பகல், மேகமூட்டம் மற்றும் மோசமான வானிலையில் கூட துல்லியமான புகைப்படங்களை எடுக்கும் வல்லமை கொண்டது.
இது, இந்திய பாதுகாப்பு படைக்கு திட்டமிடுதலுக்கு ஏற்றவாறு நிகழ்நேர தரவுகளை வழங்கக் கூடியதாக இருந்தது. எல்லை கண்காணிப்பு, தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் பங்களிக்கும் திறன் கொண்டிருந்ததோடு,, பேரிடர் மேலாண்மை, விவசாய கண்காணிப்பு மற்றும் இயற்கை ஆதாரங்களை கண்டுபிடிப்பது ஆகிய பணிகளும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.