பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், அது மக்களுக்கு மற்றொரு கூடுதல் சுமையாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சதானந்த கவுடா.
அவர் கூறியதாவது, “ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலின் காரணமாக, கடந்த சில மாதங்களாகவே மாநிலத்தில் எந்தவொரு வளர்ச்சி திட்டங்களும் நடைபெறவில்லை. இந்நிலையில், தேவையில்லாமல் ஒரு சட்டமன்ற தேர்தல் மக்களின் மீது திணிக்கப்பட்டால், அது இன்னுமொரு 40 அல்லது 50 நாட்களை வீணாக்கிவிடும்.
இதன் பாதிப்புகள் அனைத்தும் மக்களுக்குத்தான் சென்றடையும். சூழல்கள் சரியாகின்றனவா? என்று நாங்கள் பார்ப்போம். இல்லையெனில், எங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் நாங்களே அவற்றை சரி செய்வோம்” என்றார்.
கர்நாடாக மாநிலத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவது தவிர்க்க முடியாத ஒன்று என மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவகெளடா கருத்துக் கூறியதையடுத்து, சதானந்த கவுடாவின் இந்த கருத்து வெளிவந்துள்ளது. அதேசமயம், தனது கருத்தை தேவகெளடா விரைவிலேயே மறுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தான் சட்டமன்ற தேர்தலை குறிப்பிடவில்லை என்றும், நாடாளுமன்ற தேர்தலையே குறிப்பிட்டேன் என்றும் தேவகெளடா மறுப்பு தெரிவித்தார்.