மதுரை,

மைச்சர் செல்லூர் ராஜு பேரன்களின் காதுகுத்து நிகழ்ச்சிக்கு மொய் செய்யாததால், தனக்கு தொல்லை கொடுத்ததாகவும், அதன் காரணமாக அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்வதாக மதுரை பெண் வழக்கறிஞர் கிறிஸ்டி தெபோராள் பரபரப்பு புகார் கூறி உள்ளார்.

மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில்  அரசு  வழக்கறிஞராக பணி புரிந்து வந்தவர் வக்கீல் கிறிஸ்டி தெபோராள். இவர், தனது  அரசு வழக்கறிஞர்  பதவியை திடீரென்று ராஜினாமா செய்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்த கிறிஸ்டி, அவரது ஆதரவாளர்களுடன் சென்று திமுகவில் இணைந்தார்.

மதுரை மத்திய தொகுதி திமுக எம்எல்ஏ பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மாநகர் தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி ஆகியோர் முன்னிலையில் கிறிஸ்டி திமுகவில் சேர்ந்தார். இது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கிறிஸ்டி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு என்னை நேர்மையாக செயல்பட விடாமல் அமைச்சர் செல்லூர் ராஜூ  நெருக்கடி கொடுத்தார். என்றும், அவர் எனக்கு விளைவித்த இடையூறுகளை தாங்க முடியாததால் மன வேதனை அடைந்ததாகவும் தெரிவித்தார்

சமீபத்தில் நடைபெற்ற அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேரன்களின் காதுகுத்து விழாவுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்களிடம் மொய் பணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.  ஆனால், நான் அவரது குடும்ப விழாவில் பங்கேற்று மொய் செய்யவிலை. இதன் காரணமாக தனக்கு தொல்லை கொடுக்கப்பட்டது. எனவே, எனது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.