துவாரகை
பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை துவாரகை பீட சங்கராசாரியார் சரமாரியாக தாக்கி உள்ளார்.
ஆர் எஸ் எஸ் இயக்கம் தங்களை இந்து மதக் காவலர்கள் என கூறி வருகின்றன. அதையே பாஜகவும் தெரிவித்து வருகிறது. ஆனால் பல இந்து மடாதிபதிகளே ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜக மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்து மதத்தின் புகழ்பெற்ற மடமான துவாரகை மடத்தின் பீடாதிபதி சங்கராச்சாரியார் சுவரூபானந்த சரஸ்வதி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவ்விரு இயக்கங்களையும் கடுமையா விமர்சித்துள்ளர்.
அவர், “கடந்த சில வருடங்களாகவே பாஜகவும் ஆர் எஸ் எஸ் இயக்கமும் இந்து மதத்துக்கு கடும் பாதிப்பை உண்டாக்கி வருகின்றன. ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு இந்து மதத்தை பற்றி ஒன்றுமே தெரியாதது வியப்புக்குரியதாக உள்ளது. மோகன் பகவத் திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம் என கூறுகிறார். ஆனால் இந்துக்களை பொருத்த வரை திருமணம் என்பது ஒப்பந்தம் அல்ல வாழ்க்கை ஆகும்.
அத்துடன் இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்துக்கள் என பகவத் கூறுகிறார். அப்படியானால் அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ இந்து மத பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் இந்துக்கள் இல்லையா?
பாஜக தலைவர்களில் பலர் மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்களாக இருந்துக் கொண்டு பசுக்களை பாதுகாப்பது குறித்து கூறி வருகின்றனர்.
அது மட்டுமின்றி இது வரை பாஜக அரசு தனது வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
காஷ்மீரில் உள்ள விதி எண் 370 நீக்கப்பட்டதா? அனைத்து இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கப்படதா? ஒவ்வொருவருக்கும் அளிப்பதாக சொல்லப்பட்ட ரூ. 15 லட்சம் தரப்பட்டதா? அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டதா? இதில் எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை.” என சரமாரியாக கேள்விகள் எழுப்பி உள்ளார்.