கோவை: கோவை அருகே உள்ள  மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில் இரண்டு நாள் நடைபெற்ற லஞ்ச  ஒழிப்பு சோதனையில்  கணக்கில் வராத 3.32 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டது. மேலும்  சார் பதிவாளர் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் ரூ.25.33 லட்சம் லஞ்சம் பெற்றதும்  அம்பலமாகியுள்ளது.

சமீபத்தில் கோவை காட்டுநாயக்கன் பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது மேட்டுப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 80 முதல் 100 பத்திரங்கள் வரை பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இங்கு லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதால் ஏராளமான பதிவுகள் நடைபெற்ற நிலையில், அதற்காக பல ஆயிரம் ரூபாய்கள் கைமாறி வருவதாகவும் கோவை லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு கடந்த ஆக.8ம் தேதி ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து கோவை  லஞ்ச ஒழிப்பு துறை ஏடிஎஸ்பி திவ்யா, இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் அன்று மாலை 5.30 மணி முதல் திடீர் ரெய்டில் ஈடுபட்டனர். இந்த ரெய்டு சுமார் 48மணி நேரம் நடைபெற்றது.  நேற்று மாலை சோதனை நிறைவடைந்தது.

சார்பதிவாளர்  அலுவலக வாயில் கதவை பூட்டிவிட்டு  உள்ளே இருந்தவர்களையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் விசாரணை மற்றும் சோதனை நடைபெற்றது. அங்கு பணியில் இருந்த சார் பதிவாளர் சாந்தி (வயது 50), அலுவலக ஊழியர்கள், பணியாளர்கள், வெளி நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில்,  பொதுமக்கள் மற்றும் பத்திர எழுத்தர்களிடமிருந்து இடைத்தரகர் நவீன் குமார் (24), அவரது டிரைவர் ராஜா (35), அலுவலக ஊழியர் பிரவீன் குமார் (32) மூலமாக கடந்த ஒரு மாதமாக பல்வேறு டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் தனது வங்கி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் வங்கிக்கணக்குகளில் ரூ.25 லட்சத்து 33 ஆயிரத்து 880 லஞ்சமாக பெற்றிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இது குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.

முன்னதாக,  லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணைக்கு  சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழையும்போதே இடைத்தரகராக செயல்பட்டு வந்த நவீன் குமார் லஞ்ச பணத்துடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லஞ்சஒழிப்புதுறை ரெய்டில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் பணம் பறிமுதல்! இது கோவை சம்பவம்…