நெதர்லாந்து: கூட்டணி கட்சியினரின் குழப்பத்தால் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தனது பிரதமர் பதவியை ராஜினாமா ‘செய்துள்ளார். இவர் நீண்டகாலமாக டச்ச பிரதமராக இருந்து வந்த நிலையில், திடீரென பதவி விலகி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெதர்லாந்து நாட்டில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. டச்சு பிரதமராக மார்க் ரூட்டே இருந்து வந்தார். ஆனால், குடியேற்ற கொள்கையில் ஏற்பட்ட முரண்பாடுகளால், அவரது ஆட்சிக்கு ஆதரவு அளித்து வந்த 4 கட்சி கூட்டணி தலைவர்களால் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து, நான்கு கட்சிக் கூட்டணியின் தலைவர்கள் புதன் மற்றும் வியாழன் அன்று பூட்டி வைக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மார்க் ரூட்டே, கூட்டணி பங்காளிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் “சமரசம் செய்ய முடியாதவை” என்று அறிவித்தார். “அதனால் முழு அமைச்சரவையையும் கூட்டி விவாதித்து, ராஜினாமா செய்வதை எழுத்துப்பூர்வமாக ராஜாவிடம் வழங்குவேன்,” என்று கூறினார்.
இந்த நிலையில், பிரதமர் பதவியில் இருந்து ரூட்டே விலகி உள்ளார். குடியேற்றக் கொள்கையில் கூட்டணிக் கட்சிகள் வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருப்பது இரகசியமல்ல. துரதிர்ஷ்டவசமாக, அந்த வேறுபாடுகள் சரிசெய்ய முடியாதவை என்ற முடிவுக்கு நாம் வர வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
ஒரு புதிய ஆளும் கூட்டணி தேர்ந்தெடுக்கப்படும் வரை திரு ரூட்டே மற்றும் அவரது அரசாங்கம் பொறுப்பாளர் பதவியில் இருப்பார்கள். எதிர்க்கட்சிகள் உடனடித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான பழமைவாத மக்கள் கட்சியின் (விவிடி) தலைவரான திரு ரூட்டே 2010 முதல் டச்சுப் பிரதமராக இருந்து வந்தார். அவரது தற்போதைய கூட்டணி அரசாங்கம், அவர் தலைமையிலான நான்காவது, டச்சு அரசியல் வரலாற்றில் மிக நீண்ட கூட்டணி. கடந்த 2022ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று நீண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து ஜனவரி 2022 இல் பதவியேற்றது. ஆனால் ஒன்றரை ஆண்டில் கவிழ்ந்துள்ளது.
குடியேற்ற கொள்கை விவகாரம் நான்கு கூட்டணி கட்சிகளுக்கு இடையே பிளவுபடுத்தும் பிரச்சினையாக இருந்து, இன்று பிரதமர் பதவி விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
டச்சு நாடாளுமன்றத்தின் கீழ் சபைக்கான தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.
[youtube-feed feed=1]