டில்லி

நேற்று நடந்த உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் தேர்தலில் துஷ்யந்த் தவே வெற்றி பெற்றுள்ளார்.

நேற்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கமான பார் கவுன்சிலுக்கு தலைவர் தேர்தல் நடைபெற்றது.   இந்த தேர்தலில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே மற்றும் விகாஸ் சிங் ஆகியோர் போட்டியிட்டனர்.    இது குறித்து நேற்று முன் தினம் கவுன்சில் கூட்டத்தில்  போட்டியாளர்களிடையே விவாதம் நடந்தது.

அதில் துஷ்யந்த் தவே, “நான் இந்த பார் கவுன்சிலுக்கும் சக வழக்கறிஞர்கள் நலனுக்கும் நல்ல முறையில்  பணியாற்ற எண்ணுகிறேன்.  இதை தேர்தல் எனக் கருத வேண்டாம்.  உங்களுக்காகக் குரல் கொடுக்க உள்ளவரை நீங்களே தேர்வு செய்து நியமிப்பதாகக் கருதி எனக்கு வாக்களியுங்கள்.

தற்போது நமது பார் கவுன்சிலுக்கு எதிராக நீதிபதிகளின் பல அமர்வு செயல்பட்டு வருகிறது.  அதைத் தகர்த்துப் பார் கவுன்சிலின் மதிப்பையும் உறுப்பினர்கள் நலனையும் மேம்படுத்த நான் பாடுபடுவேன். “ என வாக்கு கோரினார்.

அவருடைய இந்த வாதங்கள்  பல உறுப்பினர்களைக் கவர்ந்துள்ளது.  நேற்று நடந்த தேர்தலில்  துஷ்யந்த் தவே தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட விகாஸ் சிங்கை விட 151 வாக்குகள் அதிகம் பெற்று தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  உச்சநீதிமன்ற பார் கவுன்சிலுக்கு தவே மூன்றாம் முறையாகத் தலைவர் ஆகிறார்.

உச்சநீதிமன்ற பார் கவுன்சிலின் துணைத் தலைவராக கைலாஷ் வாசுதேவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.