டில்லி
இந்திய ராணுவ வீரர்களை கொல்ல சீனப்படையினர் ஆணி பதிந்த கட்டைகளை ஆயுதங்களாகப் பயன்படுத்துவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த திங்கள் அன்று லடாக் பகுதியில் சீனப்படைகள் நடத்திய தாக்குதலில் 20க்கும் அதிகமான இந்திய வீரர்கள் உயிர் இழந்தனர். இந்த தாக்குதலின் போது துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தாமல் கற்களைக் கொண்டு தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டது. தற்போது ஆணிகள் பொருத்தப்பட்ட கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்குதல் நடந்ததாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
இது போன்ற ஆயுத தாக்குதல்கள் இரண்டாம் உலகப் போர்க் காலத்திலேயே நிறுத்தப் பட்டுள்ளன. இத்தகைய கொடூரமான ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்துவது முதலாம் உலகப் போர் சமயத்தில் அனைத்து தரப்பினரும் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த வகை ஆயுதங்களில் ஆணிகள் மட்டுமின்றி கூர்மையான முள் கம்பிகள், உடைக்கப்பட்ட கத்திகள், இரும்பு துண்டுகளும் பொருத்தப்பட்டு இருந்தன.
இதற்கு முன்பும் சீனப்படைகள் பல முறை இத்தகைய ஆயுதங்களின் மூலம் எல்லையில் தாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த மாதம் பாங்காங் ஏரிப்பகுதியில் இது போல ஒரு தாக்குதலைச் சீன ராணுவம் நடத்தியதில் இந்திய வீரர்கள் மிகவும் கடுமையாகக் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை எதிர்கொள்ள இந்திய ராணுவத்தினர் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. மூத்த ராணுவ செய்தி தொடர்பாளர் சந்தீப் உன்னிதன் போலிகார்பனேட் பதித்த கவச உடைகளை இந்திய வீரர்களுக்கு அளிக்கத் தயாரிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த உடைகளை அணிவதன் மூலம் கற்கள் மற்றும் கூர்மையான ஆயுதங்களின் தாக்குதலில் இருந்து இந்திய ராணுவ வீரர்கள் காப்பாற்றப்படுவார்கள் எனக் கூறி உள்ளார்.
இவ்வாறு ஒரு மும்பை நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 500 கவச உடைகள் ஏற்கனவே லடாக் எல்லைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த உடைகள் எல்லைப் பகுதி இந்திய வீரர்களுக்கு அனுப்பப்பட்டதா என்பதும் இதைத் தயாரித்த மும்பை நிறுவனம் எது என்பது குறித்தும் இதுவரை சரியான தகவல்கள் கிடைக்கவில்லை.