மணிலா
வரும் 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் மகன் போட்டியிட உள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப் பொருள் கடத்தல் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது அந்நாட்டு அதிபராகப் பதவியில் உள்ள ரோட்ரிகோ டுட்ரேட் இதையொட்டி பல கடும் நடவடிக்கைகளை அறிவித்தார். போதைப் பொருள் கடத்துவோரைக் கண்டதும் சுட அவர் உத்தரவிட்டது கடும் எதிர்ப்பை கிளப்பியது.
இந்த உத்தரவையொட்டி மனித உரிமை அமைப்புக்கள் அவருக்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். தனது அரசியல் எதிரிகளைப் பழி தீர்க்க அவர் இந்த நடவடிக்கைகளை எடுக்கலாம் என எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம் சாட்டின. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாம் அரசியலில் இருந்து விலக உள்ளதாகவும் வரும் 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்கள் அதிபர் ரோட்ரிகோவிடம் கேள்விகள் எழுப்பினர். அவர் தனது பதிலில், “நான் தீவிர அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளேன். வரும் 2022 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன், எனக்குப் பதிலாக எனது மகன் போட்டியிடுவார். எனது மகன் எப்போது வேட்புமனு தாக்கல் செய்கிறார் என்பது எனக்குத் தெரியாது. அவர் என்னிடம் அரசியல் குறித்து அதிகம் பேசியதில்லை” எனக் கூறி உள்ளார்.