சென்னை: தமிழ்நாட்டின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின்,  குருவாயூா் கோயிலுக்கு ரூ.14 லட்சத்தில் தங்க கிரீடம் வழங்கி பிராத்தனை செய்தார். முதல்வர் ஸ்டாலின் இந்து மதத்துக்கு எதிராக பேசி வரும் நிலையில், அவரது மனைவி துர்கா, கோவில் கோவிலாக சென்று வேண்டுதல் செய்து வருகிறார்.

திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது சகோதரி கனிமொழி இருவருமே எந்த ஒரு பிரச்சாரத்திலும் மதசார்பின்மையை வலியுறுத்துவதுடன் இந்து மதத்துக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வர். ஆனால், ஸ்டாலின் துர்கா ஸ்டாலின் கோவில் கோவிலாக சென்று மனமுருகி சுவாமி தரிசனம் செய்து வருகிறார்.  ஏற்கனவே, பழனி, திருச்செந்தூர் என பிரபலமான தமிழக கோவில்களுக்கு சென்று தனது வேண்டுதல்களை நிறைவேற்றி வந்தவர், தற்போது அண்டை மாநிலமான கேரளமாநில கோவில்களுக்கு சென்றுகொண்டிருக்கிறார்.

கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீகிருஷ்ணா் கோயிலுக்கு சென்ற துர்கா ஸ்டாலின், அங்குள்ள, மூலவருக்கு தங்க கிரீடத்தைக் காணிக்கை செலுத்தினாா்.  அவருடன், அவரது  சகோதரி ஜெயந்தி மற்றும் சில நெருங்கிய உறவினா்கள் சென்றனர். அங்கு  ஸ்ரீ குருவாயூரப்பனை வழிபட்ட துர்கா,   மூலவருக்கு 32 சவரன் எடையில் ரூ.14 லட்சம் மதிப்பிலான தங்க கிரீடத்தைக் காணிக்கை கோவில் நிர்வாகத்திடம் செலுத்தினாா். மேலும், சந்தனம் அரைப்பதற்கான இயந்திரத்தையும் அவா் காணிக்கையாக வழங்கினாா்

உச்சிகால பூஜைக்குப் பிறகு கோயில் கருவறை திறக்கப்படும் வரை காத்திருந்து அவா் காணிக்கை வழங்கிய அவருக்கு  கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.

தனது கணவரும், மகனும் ஆட்சி அதிகாரத்தை பெற்றதற்கு காணிக்கையாக, கிருஷ்ணனுக்கு  அவர் தங்க கிரிடம் காணிக்கையாக கொடுத்துள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படுகிறது.