கொல்கத்தா: யுனெஸ்கோ அமைப்பின் கலாச்சார அம்சங்கள் பட்டியலில் சேர்ப்பதற்காக, கொல்கத்தாவின் துர்கா பூஜை, இந்திய அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் சார்பாக, ஏற்கனவே 13 பண்பாட்டு அம்சங்கள் யுனெஸ்கோ அமைப்பின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வரும் 2020ம் ஆண்டில், யுனெஸ்கோ பட்டியலில் இணைக்கப்படும் வகையில், துர்கா பூஜையானது பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான சங்கீத் நாடக் அகடமியின் சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. யோகா, கும்பமேளா மற்றும் சோவ – ரிக்பா போன்றவை ஏற்கனவே யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெற்றுவிட்டன.
கொல்கத்தாவின் துர்கா பூஜையை பொறுத்தமட்டில், அதில் பலவிதமான கலைஞர்களும் வடிவமைப்பாளர்களும் இணைந்து, ஒரு புதுவிதமான நகர்ப்புற கலையை கட்டமைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
– மதுரை மாயாண்டி