திமுகவில் அரசியல் போட்டி காரணமாக விலகி இருந்த சகோதரர்கள் ஸ்டாலினும் அழகிரியும் தந்தை கருணாநிதி இறந்தப்போது பங்கேற்றார்கள். ஆனால், அவ்வளவு இணக்கம் ஏற்படவில்லை.

தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வரானபோது, மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்தார். அதோடு, முதல்வராகும் தனது தம்பியை நினைத்து பெருமைப்படுவதாகக் கூறினார்.

முதல்வர் பதவியேற்பு விழாவில், கொரோனா தொற்று காரணமாக மு.க.அழகிரி பங்கேற்கவில்லை. ஆனால், அவருடைய மகன் துரை தயாநிதியும் மகளும் கலந்துகொண்டனர்.

இந்த சூழலில்தான், மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு 10 நாட்களுக்கு முன்பு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனால், மு.க.அழகிரி வீட்டினர் சந்தோஷத்தில் உள்ளனர் .

குடும்பத்தினர் குழந்தைக்கு இன்று மே 28ம் தேதி பெயர் சூட்டு விழா நடத்துகிறார்கள். கொரோனா தொற்று பரவல் காரணமாக நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பேரனுக்கு பெயர் சூட்டுவிழாவுக்காக மதுரையில் இருந்து சென்னை வந்துள்ளார் அழகிரி.

குழந்தைக்கு ‘வேதாந்த்’ என பெயரிட்டுள்ளனர் . இதனை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் துரை தயாநிதி.

இயக்குனர் C.S.அமுதன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் படம் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமான தயாநிதி அழகிரி முன்னதாக தனது தயாரிப்பு நிறுவனமான க்ளவுட் நைன் மூவிஸ் சார்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கியத்தில் நடிகர் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படத்தை வெளியிட்டிருந்தார்.