டில்லி
ஆப்கானிஸ்தான் கந்தகாரில் போர் வலுவடைந்து வருவதால் இந்திய அரசு தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் தொடர்ந்து போர் நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. இவர்கள் தலைவர் பின்லேடனை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சுட்டுக் கொன்ற அமெரிக்கப் படைகள் தொடர்ந்து தாலிபான்களுடன் போர் புரிந்து வந்தனர். தற்போது அமெரிக்கப் படைகள் ஓய்ந்த பிறகும் போர் தொடர்கிறது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் 80% பகுதியை தாங்கள் கைப்பற்றி விட்டதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இத ஆப்கான் அரசு முற்றிலும் நிராகரித்த போதும் நாட்டின் பல நகரங்களில் போர் அபாயம் அதிக அளவில் உள்ளது. மேலும் ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் தாலிபான்கள் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும் என அச்சம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரான கந்தகார் நகரில் போர் வலுவடைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையொட்டி அந்நகரில் உள்ள தூதரக ஊழியர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தியாவுக்குத் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். கந்தகார் மற்றும் மஸார் நகரங்களில் உள்ள அனைத்து இந்திய அமைப்புக்களையும் மூட இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.