சென்னை: தமிழ்நாட்டின் மின்உற்பத்தி அதிகரிப்பால் வெளிமாநிலங்களுக்கு மின்விற்பனை செய்யப்படுவதாக தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி உள்ளார்.
கோடை காலத்தில் தடையற்ற மின்சாரம் வழங்குவது குறித்து, மின்துறை தலைமைப் பொறியாளர்களுடன் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு நடத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர். “தமிழ்நாடு முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் உச்சபட்ச மின் தேவையான 17,563 மெகாவாட் 29.04.2022 அன்று எந்தவித மின் தடங்கலும் இன்றி பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது. அன்று மின் நுகர்வோரால் உபயோகப்படுத்தப்பட்ட மின்சாரத்தின் அளவு மட்டும் 38.9 கோடி யூனிட்டுகள் ஆகும். நம்முடைய மின் தேவை என்பது உட்சபட்ச மின்தேவை பூர்த்தி செய்ய கூடிய அளவிற்கு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எடுக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.
நடப்பாண்டு, 17நாட்கள் 16,000 மெகாவாட்டுக்கு மேலாக உச்சபட்சமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், பல்வேறு மாநிலங்களில் தொழிற் சாலைகளுக்கு மின்வெட்டுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன, மின் விநியோகத்திலும் நிறுத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கையின் காரணமாக கடந்த 01.05.2022 அன்று 1.44 இலட்சம் யூனிட்டுகளையும், 08.05.2022 அன்று 4.5 இலட்சம் யூனிட்டுகளையும் யூனிட் ஒன்றிற்கு ரூ.12 வீதம் வெளிமாநிலங்களுக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளார்.
மத்தியஅரசால் தமிழ்நாட்டிற்கு இதுவரை நிலக்கரி நாள் ஒன்றிற்கு 48 ஆயிரம் மெட்ரிக் டன் முதல் 50 ஆயிரம் மெட்ரிக் டன் வரை ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்த நிலையில், முதல்வர் கடிதம் எழுதி வற்புறுத்தியன் தொடர்ச்சியாக, தற்போது நாள் ஒன்றிற்கு 57 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு நிலக்கரி கிடைக்கிறது. ஆனால், தமிழ்நாட்டிற்கு நாள் ஒன்றிற்கு 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவை. நிலக்கரியைக் கொண்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு சொந்தமான 4,320 மெகாவாட் திறன் கொண்ட அனல் மின் நிலையங்களிலிருந்து 4,165 மெகாவாட் 27.04.2022 அன்று உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் தமிழகஅரசு கூடுதல் சிக்கன நடவடிக்கையாக காற்றலைகள் மற்றும் சூரியஒளியின் மூலம் கிடைக்கப்பெறும் மாசில்லா பசுமை மின்சாரத்தினை முழு அளவில் பயன்படுத்தும் பொருட்டு, தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையங்களில் உள்ள மின் உற்பத்தி அலகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு மாலை மற்றும் இரவு நேர உச்சபட்ச மின் தேவையினை ஈடுகட்டுவதற்கு மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றன.
இதனால், உபயோகிக்கப்படும் நிலக்கரியின் அளவு குறைக்கப்படுவதோடு குறைந்த செலவில் மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் மூலம் கிடைக்கப்பெறும் மின்சாரத்தினை முழுமையாக பயன்படுத்த முடியும். எனவே, தமிழ்நாட்டில் மின்வெட்டு போன்ற மாயத்தோற்றத்தினை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது உண்மைக்கு புறம்பான செய்தி என்பதோடு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தமிழ்நாட்டு மக்களுக்கு தொடர்ந்து தங்குதடையில்லா மின்சாரத்தினை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
கடந்த இரு வாரங்களில் தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து இதரப் பகுதிகளில் பெய்த பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய கடும் கோடை மழையினால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உட்கட்டமைப்பில் மிகுந்த சேதங்கள் ஏற்பட்டன. இதுவரையிலும், 80 மின்னல் தடுப்பான்களும், 48 மின் விநியோக மின்மாற்றிகளும், 14 மின்சார மின்மாற்றிகளும், 76 மின்னழுத்த மின்மாற்றிகளும், 74 பிரேக்கர்களும், 24 காற்றுத் திறப்பான்கள், 1,240 இடங்களில் இன்சுலேட்டர்கள் மற்றும் வெவ்வேறு இடங்களில் 370-க்கும் மேற்பட்ட மின்கம்பங்களும் சேதமடைந்தன.
இவை அனைத்தும் உடனுக்குடன் சரிசெய்யப்பட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்கப்பட்டது. தற்பொழுது, பத்தாம் வகுப்பு மற்றும் +2 மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெற்று வருகிறது. அனைத்து தேர்வுகளும் முடிவடைந்தவுடன் பராமரிப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்வதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு, இந்த நிதியாண்டில் மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தின் கீழ் சுமார் 26,300 விநியோக மின்மாற்றிகளும், 13,000 கி.மீ. நீளத்திற்கு உயர் மின்னழுத்த மின்பாதை மற்றும் 3,000 கி.மீ. நீளத்திற்கு தாழ்வழுத்த மின்பாதைகளும் நிறுவப்பட உள்ளன. இதனால், கணிசமாக மின்பாதைகளில் ஏற்பட்டு வரும் இழப்புகள் குறைக்கப்படும் என்றும் கூறினார்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மின்வெட்டு நிகழ்கிறது. ஆனால், தமிழகஅரசு மின்தடை இல்லை என்று மறுத்து வருகிறது. ஆனால், சென்னை உள்பட மாநிலத்தின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு வருகிறது என்பதை, தற்போது பொதுத்தேர்வு எழுதி வரும் மாணாக்கர்களே உறுதி செய்து வருகின்றனர். இதுமட்டுமின்றி கிராமப்புறங்களிலும் மின்தடை நடை முறைப்படுப்பட்டு வருகிறது. ஆனால், மின்துறை அமைச்சரோ, மின்வெட்டு இல்லை என்று தொடர்ந்து கூறி வருவதுடன், மின்தடை குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டி வருகிறார். ஆனால், இதே அமைச்சர்தான் கடந்தவாரம் மின் உற்பத்திக்கு நிலக்கரி இல்லை என்று கூறி, அதனால்தான் சில பகுதிகளில் மின்தடை எற்பட்டதாகவும் கூறியிருந்தார்.
தமிழ்நாட்டில் மின்தேவை அதிகரித்துள்ள சூழலில் மின்தடையை முழுமையாக விலக்குவதை தவிர்த்து விட்டு, மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வதை அமைச்சர் பெருமையாக கூறியுள்ளார்.