ராமேஸ்வரம்

சூறாவளிக் காற்று பலமாக வீசுவதால் மன்னார் வளைகுடாவில் மீன் பிடிக்கச் செல்ல மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. இங்கு மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால், மறு அறிவிப்பு வரும் வரை இப்பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

நேற்று ராமேசுவரம் கடல் பகுதியிலும் சூறாவளி, கடல் சீற்றம் காரணமாக பாம்பனில் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டது. தெற்குவாடி துறைமுக கடல் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 600-க்கும் அதிகமான நாட்டுப்படகுகளும் கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை இப்பகுதியில் உள்ள தீவுகளுக்கு படகு போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி பாம்பன் குந்துகால் கடற்கரையில் இருந்து குருசடை தீவுக்கு வனத்துறை சுற்றுலா படகு போக்குவரத்து இயக்குவதும் தற்காலிகமாக \ நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.