பாட்னா

பீகார் மாநில அரசு கொரோனா பணி புரியும் மருத்துவர்கள் கோரிக்கையை கண்டு கொள்ளாததால் அவர்களே  தங்களுக்கான மருத்துவ வசதிகளைச் செய்துக் கொண்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.   குறிப்பாக கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள சுமார் 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 150 பேர் மருத்துவர்கள் ஆவார்கள். இதுவரை 9 மருத்துவர்கள் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனைகளில் கொரோனா பணி புரியும் பல மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையொட்டி பீகாரில் உள்ள மருத்துவர்கள் தங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள கொரோனா பிரிவில் 50% படுக்கைகளை ஒதுக்கீடு செய்யுமாறு நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  ஆனால் அரசு இந்த கோரிக்கையைக் கவனத்தில் கொள்ளாமல் உள்ளது.   பீகார் அரசு மருத்துவர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் தேவையான மருத்துவ வசதிகள் அளிப்பதில்லை எனப் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

பீகாரில் தற்போது கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையிலும் மருத்துவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

அரசின் அலட்சியத்தால் மருத்துவர்கள் ஒன்று சேர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர்களுக்கான மருத்துவ வசதிகளை தாங்களே செய்துக் கொள்ளத் தொடங்கி உள்ளனர்.  பல முறை கோரிக்கை விடுத்தும் பீகார் மாநில அரசு அதற்குச் செவி சாய்க்காததால் பீகார் மாநில தலைநகரில் தாங்களே இந்த நடவடிக்கையை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை அறிந்த இந்திய மருத்துவர் சங்கம் பீகார் மாநில அரசு உடனடியாக இதில் தலையிட்டு மருத்துவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.