இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து விநியோகம் செய்யும் நிறுவனங்கள் இரண்டு, ஒன்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றொன்று பாரத் பையோடெக்.
பாரத் பையோடெக் நிறுவனம் கண்டுபிடித்து தயாரிக்கும் மருந்தின் பெயர் ‘கோவாக்சின்’.
அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து ஆக்ஸ்போர்ட பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள மருந்தின் பெயர் ‘கோவிஷீல்டு’, இதனை இந்தியாவின் அதார் பூனாவாலாவின் சீரம் நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவிஷீல்டு மருந்தின் விலை, கடந்த வாரம் உயர்த்தப்பட்டது, ஒரு டோஸ் மருந்தின் விலை மத்திய அரசுக்கு தயாரிப்பு விலையான ரூ. 150 க்கும், மாநில அரசுகளுக்கு ரூ. 400 க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 600 க்கும் வழங்கப்படும் என்று விலை நிர்ணயம் செய்தது.
இதனை தொடர்ந்து மற்றொரு மருந்தான கோவாக்சின் விலையையும் அதன் நிறுவனம் நேற்று உயர்த்தியிருக்கிறது. ஒரு டோஸ் மருந்தின் விலை மாநில அரசுகளுக்கு ரூ. 600 என்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ. 1200 என்றும் நிர்ணயம் செய்துள்ளது.
ஏற்கனவே 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ரூ. 250 கட்டணத்தை மத்திய அரசு நிர்ணயித்த நிலையில், மருந்து நிறுவனங்களின் இந்த திடீர் விலையேற்றத்தால், 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பொறுப்பை மாநில அரசுகளின் வசம் ஒப்படைத்து விட்டது.
மாநில அரசுகள் இதனை இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டாலும், மருந்து நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசுகளுக்கு நிர்ணயித்துள்ள புதிய விலையில் தான் மருந்துகளை வாங்கவேண்டியுள்ளது. தனியாருக்கு இதே நிலைதான் என்றபோதும், அவர்கள் வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து எந்த தகவலும் இதுவரை இல்லை. இது மருந்து நிறுவனங்களுக்கு அவர்களின் தயாரிப்பு விலையான ரூ. 150 போக பெருத்த லாபத்தை ஏற்படுத்த வழி செய்திருக்கிறது.
மக்கள் தொகை கணக்கின்படி இந்தியாவில் 45 வயதுக்கு குறைவானவர்களின் எண்ணிக்கை சுமார் 101 கோடி என்று சொல்லப்படுகிறது. இவர்களுக்கு 2 டோஸ் முழுமையான தடுப்பூசி போட 202 கோடி டோஸ் மருந்து தேவைப்படுகிறது.
The profit of the two vaccine manufacturers – Serum Institute of India and Bharat Biotech will be 1.11 lakh crore (35,350 + 75,750 = 1,11,100 crore): Congress pic.twitter.com/nqkMuAmp4a
— Arvind Gunasekar (@arvindgunasekar) April 25, 2021
இந்த 202 கோடி டோஸ் மருந்துகளுக்கான விலையை மாநில அரசோ அல்லது தனியார் மருத்துவமனை மூலம் தனிநபர்களோ செலுத்த வேண்டும். தற்போதைய உற்பத்தி திறனை வைத்து பார்க்கும் போது இரண்டு நிறுவனங்களுமே சரிசமமாக 50 – 50 விழுக்காடு மருந்து விநியோகிக்கும் என்று அனுமானிக்கப்படுகிறது.
இவர்களின் இந்த உற்பத்தி திறன் அடிப்படையில் 202 கோடி டோஸேஜ்களில் ஆளுக்கு பாதி அதவாது 101 – 101 கோடி டோஸ் மருந்தை விநியோகிக்க இருக்கிறது.
இதில் ‘கோவிஷீல்டு’ சீரம் நிறுவனம் மாநில அரசுக்கு நிர்ணயித்திருக்கும் 400 ரூபாயில் அதன் உற்பத்தி விலையான 150 போக ரூ. 250 ஒரு டோஸ்க்கு லாபமீட்டுகிறது, தனியாருக்கு நிர்ணயித்திருக்கும் விலையில் உற்பத்தி விலை போக ரூ. 450 லாபமீட்டுகிறது.
‘கோவாக்சின்’ பாரத் பையோடெக் நிறுவனம் மாநில அரசுக்கு நிர்ணயித்திருக்கும் விலையில் ரூ. 450 ம், தனியாரிடம் ரூ. 1050 ம் ஒரு டோஸ்க்கு லாபமீட்டுகிறது.
இந்த மருந்துகளை 50 சதவீதம் மாநில அரசுக்கும் 50 சதவீதம் தனியாருக்கும் விநியோகிப்பதன் மூலம் இவர்களின் லாபம் என்னவாக இருக்கும் என்று அனுமானிக்க பட்டது.
இதில் ‘கோவிஷீல்டு’ விநியோகிக்க இருக்கும் 101 கோடி டோஸில் 50 சதவீதம் 50.5 கோடி மாநில அரசு மூலமும் மீதமுள்ள 50.5 கோடி டோஸ் தனியார் மூலமும் விநியோகிப்பதன் மூலம், மாநில அரசிடமிருந்து 12,625 கோடி ரூபாயும் தனியாரிடமிருந்து ரூ. 22,725 கோடியும் ஆக மொத்தம் ரூ. 35,350 கோடி சீரம் நிறுவனத்திற்கு லாபமாக கிடைக்க இருக்கிறது.
பாரத் பையோடெக் நிறுவனம் மாநில அரசிடமிருந்து ரூ. 22,725 கோடியும் தனியாரிடமிருந்து ரூ. 53,025 கோடி ஆக மொத்தம் 75,750 கோடி ரூபாயும் லாப மீட்ட இருக்கின்றன.
இவ்விரு நிறுவனங்களும் சேர்ந்து தனியார் மற்றும் மாநில அரசுகள் மூலம் 45 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் 1,11,100 கோடி ரூபாய் லாபமீட்ட இருக்கின்றன என்று புள்ளிவிவர ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருந்தபோதும், ஸ்புட்னிக் என்ற வெளிநாட்டு தடுப்பூசி மூன்றாவதாக களமிறங்க இருப்பதாலும், உள்ளூர் நிறுவனங்களின் இந்த விலையேற்றம் புதிய நிறுவனங்களுக்கு கைகொடுக்கும் என்பதாலும், இதன் விலை, சந்தையில் ஏற்படுத்த போகும் தாக்கம், தடுப்பூசி விற்பனையில் இதன் பங்கு மற்றும் இந்தியாவில் இவற்றை விநியோகிக்க இருக்கும் நிறுவனம் குறித்த விவரங்கள் தெரிந்த பின்னரே, அதார் பூனாவாலா மற்றும் பாரத் பையோடெக் ஆகிய நிறுவனங்களுக்கு இந்த லாபத்தில் ஏற்பட இருக்கும் நஷ்டம் குறித்து முழுமையாக தெரியவரும் என்று வேறு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.