லக்னோ
ராமர் கோவில் பூமி பூஜை நிகழ்வில் சமூக இடைவெளி விதிகள் கடுமையாக்கப்பட்டு அழைப்பாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
நாடெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல முக்கிய தலைவர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். குறிப்பாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் பெண் அமைச்சர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிர் இழந்துள்ளார். அம்மாநில பாஜக தலைவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழக ஆளுநர், உள்ளிட்டோரும் இதில் அடங்குவர்.
இந்நிலையில் வரும் 5 ஆம் தேதி அன்று ராமர் கோவில் பூமி பூஜை நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். இந்த விழா அமைப்பாளரான ராம் ஜன்ம பூமி தீர்த்த ஷேத்திர டிரஸ்ட் 267 பேரை விழாவுக்கு அழைக்க திட்டமிட்டிருந்தது. தற்போது அது 162 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த விழாவில் சமூக இடைவெளி கோஷத்தின்படி இரண்டு கஜ தூரம் மிக மிக அவசியம் எனப் பின்பற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருக்கைகளும் அதே அடிப்படையில் அமைக்கப்பட உள்ளது. மேடையில் பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்ய நாத் மற்றும் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகிய நால்வர் மட்டுமே இடைவெளி விட்டு அமர உள்ளனர்.
இந்த விழாவுக்குப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுற்றுலா அமைச்சர் பிரகலாத் படேல், பாஜக தலைவர் ஜே பி நட்டா, அயோத்தி நாடாளுமன்ற உறுப்பினர் லாலு சிங் முன்னாள் அமைச்சர் உமா பாரதி மற்றும் வினய் கட்டியார் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. உபி மாநில அமைச்சர்களும் அழைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பாபர் மசூதி வழக்கில் முக்கியமானவரான இக்பால் அன்சாரியும் அழைக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால் அயோத்தி நகர மக்களை அந்த கோவில் வளாகத்துக்கு வர வேண்டாம் என நகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் ஊரெங்கும் ஒலிபெருக்கி மற்றும் எல் இ டி திரைகள் வைக்கப்பட்டு மக்கள் அதன் மூலம் நிகழ்ச்சியைக் காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.