டில்லி
தகவல்கள் தடை செய்யப்படுவதைத் தடுக்கும் வசதி இல்லாத பழைய தொழில் நுட்பத்தால் தகவல் கிடைக்காமல் அபிநந்தன் எதிரிகளிடம் சிக்கியதாகத் தகவல்கள் வந்துள்ளன.
கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி அன்று புல்வாமாவில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது இயக்கம் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம் அடைந்தனர். இதற்காக அதே மாதம் 26 ஆம் தேதி அன்று இந்திய விமானப் படை பாலகோட் பகுதியில் முகாமிட்டு இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் முகாம் மீது வான்வழி தாக்குதல் செய்து அழித்தனர். இதனால் 27 ஆம் தேதி அன்று பாகிஸ்தான் நாட்டுப் போர் விமானங்கள் எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தின.
அவர்களை விரட்டிச் சென்ற இந்திய விமானப்படை வீரர் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டார். அவர் பாகிஸ்தான் நாட்டின் எஃப் 16 விமானத்தை வீழ்த்தி விட்டு வரும்போது இந்தியாவின்மிராஜ் விமானம் தாக்கப்பட்டதில் தரையிறங்க நேரிட்டது. தற்போது வந்துள்ள செய்திகளின்படி அவரை உடனடியாக திரும்பச் சொல்லி இந்திய விமானப்படை தகவல் அனுப்பியது தெரிய வந்துள்ளது.
ஆனால் பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானத்துக்கு வரும் தகவல்களைத் தடை செய்துள்ளதால் அவருக்கு இந்த தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் அதனால் அவர் எதிரிகளிடம் சிக்கிக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள போர் விமானங்களில் தகவல்கள் பெறுவதைத் தடை செய்ய முடியாத தொழில்நுட்பம் அமைந்துள்ளது. ஆனால் மிராஜ் விமானங்களில் அந்த தொழில் நுட்பம் இல்லாததால் அபிநந்தன் பிடிபட்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது இதை மனதில் கொண்டு அத்தகைய தொழில்நுட்பத்தை இந்திய விமானப்படை பாரத் எலக்டிரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் உதவியுடன் வடிவமைத்துள்ளது. விரைவில் இந்த தொழில் நுட்பம் ஏற்கனவே உள்ள பழைய விமானங்களில் பொருத்தப்பட உள்ளது. புதியதாக வாங்கப்படும் ரஃபேல் விமானங்களில் இந்த தொழில்நுட்பம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.